< Back
ஆன்மிகம்
மகாவிஷ்ணுவின் ஐந்து நிலைகள்
ஆன்மிகம்

மகாவிஷ்ணுவின் ஐந்து நிலைகள்

தினத்தந்தி
|
21 March 2023 8:30 PM IST

பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாக, பரப்பிரம்மமாக, பரமாத்மாவாக ஸ்ரீமன் நாராயணன் விளங்குகிறார் என்கின்றன புராணங்கள்.

மனிதர்களிடம் வழிபாடு என்னும் வழக்கம் தொடங்கிய காலத்திலேயே திருமால் வழிபாடு உலகெங்கும் பரவி இருந்தது என்பதை வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன. தமிழ்நாட்டிலும் கூட சங்க காலம் முதலே, திருமால் வழிபாடு இருந்து வந்திருக்கிறது. பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாக, பரப்பிரம்மமாக, பரமாத்மாவாக ஸ்ரீமன் நாராயணன் விளங்குகிறார் என்கின்றன புராணங்கள். இந்த உலகம் முழுவதிலும் நிறைந்திருந்து, மகாவிஷ்ணுவே, ஐந்து நிலைகளில் இருந்து அகில உலகங்களையும் காப்பதாக வேதங்கள் சொல்கின்றன. அப்படி மகாவிஷ்ணு இருக்கும் ஐந்து நிலைகளாவன:- பர நிலை, வியூஹ நிலை, விபவ நிலை, அந்தர்யாமி நிலை, அர்ச்ச நிலை. இவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.

பர நிலை:- வைகுண்டத்தின் பரமபதத்தில் பாற்கடலில் பரவாசுதேவன் என்ற திருநாமத்தில் ஸ்ரீவிஷ்ணு ஆனந்த சயனனாக ஆதிசேஷன் மீது அறிதுயில் கொண்டிருக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்ற மூன்று தாயாருடன், நித்யசூரிகள் எனும் அமரத்துவம் கொண்ட அடியார்களுடன் விளங்குகிறார். ஞானம், ஐஸ்வர்யம், சக்தி, கருணை, வீரியம், தேஜஸ் ஆகிய ஆறு குணங்களைக் கொண்டவர் இவர். சதாசர்வ காலமும் பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் இந்த பெருமானையே சகல ஜீவன்களும் புண்ணியம் பெற்று இருப்பின் வாழ்நாளுக்குப் பிறகு அடையும் என்பது ஐதீகம்.

வியூஹ நிலை:- இதில் வாசுதேவன், சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் என்ற நான்கு திருநாமங்களுடன் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு திசைகளை நோக்கி உள்ளார். இவர்களே எல்லா உலகங்களையும் உருவாக்கி, அறநெறிகளையும், உண்மைகளையும் போதித்து தர்மம் நிலைபெறச் செய்கின்றனர். சாஸ்திரங்களை உருவாக்குகின்றனர். பிரளயத்தில் உலகின் அழிவுக்கு வழி வகுக்கின்றனர்.

விபவ நிலை:- விபவம் என்றால் பகவானின் அவதாரங்களைக் குறிக்கும். புண்ணியம் செய்தவர்கள் முக்தி அடைந்தால் காணக்கூடியது பர நிலை. தேவாதி தேவர்கள் மட்டுமே காணக் கூடியது வியூஹ நிலை. ஆனால் மண்ணுலகில் சகலரும் காணக்கூடிய நிலை என்றால் அது இதுதான். திருமால் அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலைநாட்ட ஒவ்வொரு காலத்திலும் ஒன்பது அவதாரங்களை எடுத்தார். `அவதாரம்' என்றாலே `இறங்கி வருதல்' என்று பொருள். எளியவர்களான நம்மால் பரம்பொருளை அணுக முடியாது என்பதால் கருணை வடிவான திருமால் மண்ணுலகில் இறங்கி வந்து அவதரித்த வடிவங்களே விபவ நிலை. மச்ச, கூர்ம, வராஹ, வாமன, நரஸிம்ஹ, ராம, பரசுராம, பலராம, கிருஷ்ண அவதாரங்களே அவை. இனி எடுக்கவிருப்பது கல்கி.

அந்தர்யாமி நிலை:- பிறப்பெடுத்த ஜீவன்கள் ஒவ்வொருவரிலும் திருமால் நிலைத்திருக்கும் தன்மையே அந்தர்யாமி என்ற நிலை. அதாவது நாமெல்லாம் ஜீவாத்மா, ஜீவாத்மாவின் மூலம் பரமாத்மா. ஒவ்வொருவருக்குள்ளும் அந்தர்யாமியாக திருமால் இருப்பதை உணர்ந்து கொண்டால் வாழ்வும் இறுதியும் ஆனந்த மயமாக மாறி விடும் என்பது சூட்சுமம்.

அர்ச்ச நிலை:- ஆயிரமாயிரம் அர்ச்சாவதாரங்களை திருமால் பக்தர்களின் நலனுக்காக எடுத்துள்ளார். ஆலயங்களில் நாம் தரிசிக்கும் மூர்த்தங்கள் யாவும் அர்ச்சாவதாரம் எனும் திருமாலின் வடிவங்களே. இவை தானாகவே விக்கிரக வடிவில் ஓர் இடத்தில் தோன்றினால், அதை ஸ்வயம் வியக்தம் என்றும், தேவர்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டு இருந்தால் அது தைவிக அர்ச்சம் என்றும், முனிவர்கள், ரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தால் ஆர்ஷம் என்றும், அரசர்கள், மனிதர்கள் பிரதிஷ்டை செய்திருந்தால் அவை மானுஷ அர்ச்சம் என்றும் வணங்கப்படும்.

மேலும் செய்திகள்