< Back
ஆன்மிகம்
நம்பிக்கை ஒரு போதும் கெட்டுப்போவதில்லை
ஆன்மிகம்

நம்பிக்கை ஒரு போதும் கெட்டுப்போவதில்லை

தினத்தந்தி
|
12 July 2022 3:06 PM IST

அன்பானவர்களே, இவ்வுலக வாழ்க்கையில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை, எதிர்பார்ப்பு, ஏதோ ஒரு காத்திருப்பு இருக்கும். இறைவனுடைய வாக்குத்தத்த வார்த்தைகளும் இருக்கும்.

ஆனாலும் வாழ்க்கையில் எதிர்பார்த்த காரியங்கள், உயர்வுகள், வேலைகள், தாமதித்து கொண்டிருக்கும், அல்லது எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக வாழ்வில் நடந்து கொண்டிருக்கும்.

எதிர்கால கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தைச்செல்வம், ஆரோக்கியம், உயர்ந்த பதவி, வசதியான வாழ்க்கை உள்பட பல்வேறு ஆசைகள், கனவுகள் அனைவருக்கும் இருக்கும். இவை இயல்பாகவே எல்லா மனிதர்களிடத்திலும் இருக்கக்கூடிய தேவையான, நியாயமான ஆசைகளே ஆகும்.

ஆனாலும் ஒரு சிலருக்கு ஆசைப்படுவது, விரும்புவது தாமதமாகிக் கொண்டிருக்கும் அல்லது நேர்மாறாக வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும். இதனால் மனதில் சோர்வு, வருத்தம் ஏற்படுகிறது. இதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு நம்பிக்கையோடு இருந்தால் கர்த்தர் நமக்கு நாம் விரும்பியதை தருவார். இதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வை காண்போம்.


வேதாகமத்தில் யோசேப்பு என்று ஒரு மனிதர் இருந்தார். அவர் ஒருநாள் ஒரு கனவு கண்டு அதை தன்னுடைய சகோதரர்களிடமும், தந்தையிடமும் கூறுகிறார். அந்த கனவில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்களும் தன்னை வணங்கியதாக கூறுகிறார். இதன் காரணமாக அவருடைய சகோதரர்கள் பொறாமை கொண்டு அவரை வெறுத்து பகைக்கின்றார்கள்.

ஒருநாள் சகோதரர்கள் ஆடு மேய்க்கின்ற இடத்திற்கு யோசேப்பு செல்கிறார். அங்கே அவருடைய சகோதரர்கள் அவரை கொலை செய்யும் படி ஆலோசனை பண்ணி, பின்பு அவரை 20 வெள்ளிக் காசுக்கு விற்று விடுகிறார்கள். எகிப்து தேசத்தின் பிரதான அதிகாரி போத்திபார் என்பவரின் வீட்டிற்கு விலைக்கு விற்கப்பட்டு கொண்டு செல்லப்படுகிறார்.

ஒருநாள் போத்திபாரின் மனைவியால் பொய் குற்றம் சாட்டப்பட்டு யோசேப்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்படுகிறார். எகிப்தின் மன்னர் பார்வோனால் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட இரண்டு வேலைக்காரர்கள் யோசேப்போடு சிறைச்சாலையில் இருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரு கனவு காண்கிறார்கள். அதன் அர்த்தம் அவர்களுக்கு புரியவில்லை.

யோசேப்பு கடவுளின் அருளால் அந்தக் கனவின் அர்த்தத்தை அவர்களுக்கு தெரியப்படுத்துகிறார். யோசேப்பு கூறியபடியே அதில் ஒரு வேலைக்காரன் தூக்கில் தொங்கவிடப்படுகிறார். ஒரு வேலைக்காரன் திரும்பவும் மன்னரிடமே வேலைக்கு திரும்புகிறார். அவன் யோசேப்பை மறந்து விடுகிறான்.

இதன் பிறகு நீண்ட நாள் கழித்து எகிப்து மன்னர் பார்வோன் ஒரு கனவு காண்கிறார். அதன் அர்த்தம் அவருக்கு புரியவில்லை. எகிப்தின் மந்திரவாதிகளாலும், ஜோதிடர்களாலும் அந்தக்கனவின் அர்த்தத்தை கூறமுடியவில்லை. அப்பொழுது யோசேப்போடு சிறைச்சாலையில் இருந்த வேலைக்காரன் யோசேப்பை பற்றி மன்னரிடம் கூறுகிறார்.

உடனே யோசேப்பு சிறைச்சாலையிலிருந்து புது ஆடை அணிவிக்கப்பட்டு மன்னரின் முன்பு நிறுத்தப்படுகிறார். பார்வோன் கண்ட கனவு மற்றும் அதன் அர்த்தத்தை யோசேப்பு சரியாக விளக்கிக் கூறுகிறார். யோசேப்போடு கடவுள் இருக்கிறார் என்று பார்வோன் அறிந்து அவரை எகிப்தின் பிரதம மந்திரியாக உயர்த்துகிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பாக யோசேப்பு கண்ட கனவு, கடவுள் மூலமாக நிறைவேற்றப்படுகிறது. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பாக யோசேப்புக்கு கடவுள் கொடுத்த வாக்குத்தத்த கனவு அவருக்கு உடனடியாக அற்புதத்தை செய்யவில்லை. மாறாக சொந்த சகோதரர்களால் பகைக்கப்படுகிறார், அடிமையாக விற்கப்படுகிறார், பொய் குற்றச்சாட்டுக்கு ஆளாகி சிறைச்சாலைக்கு செல்கிறார். நண்பரால் மறைக்கப்படுகிறார். அதன் பின்பு ஒரு நாள் வந்தது, நாட்டிற்கே பிரதம மந்திரியாக உயர்த்தப்படுகிறார். எல்லா சூழ்நிலைகளிலும் கடவுள் யோசேப்போடு இருந்தார். அதனால் அவர் விவேகத்துடன் செயல்பட்டு நல்ல பெயர் பெறுகிறார்.

இன்றைக்கும் நம்மில் அநேகர் ஏதோ ஒரு காரியத்திற்காக, பொருளாதார தேவைகளுக்காக, படிப்புக்காக, வேலைக்காக, திருமணத்திற்காக, குழந்தை செல்வத்திற்காக, நோய் குணமாகி ஆரோக்கியமாக... இப்படி ஏதோ ஒன்றிற்காக இறைவனிடம் கையேந்தி நிற்கிறோமா? இறைவனும் வாக்குத்தத்தங்கள் கொடுத்த பின்பும் தாமதமாகிறதா? அல்லது நடக்கவில்லையே என்று வருத்தப்படுகிறீர்களா?

இறைவன் உங்களைப் பார்த்து கூறுகிறார், "உங்களைக் குறித்து சொல்லப்பட்ட காரியங்கள் அனைத்தும், நீங்கள் எதிர்பார்த்திருக்கும் காரியங்கள் யாவும் நிச்சயமாய் நிறைவேறும். திட மனதுடன், நம்பிக்கையுடன், கடவுளுக்கே காத்திருங்கள்".

வேதாகமத்தில் கடவுள் சொல்கிறார்: "குறித்த காலத்திற்கு தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது, முடிவிலே அது விளங்கும். அது பொய் சொல்லாது, அது தாமதித்தாலும் அதற்கு காத்திரு. அது நிச்சயமாய் வரும் அது தாமதிப்பதில்லை". (ஆபகூக் 2:3).

"நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படி நான் உங்கள் பெயரில் நினைத்து இருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கு ஏதுவான நினைவுகளே" - எரேமியா 29:11.

ஆகவே சூழ்நிலைகளைப் பார்த்து கலங்காமல், பயப்படாமல் இறைவன் மேல் நம்பிக்கையாய் இருங்கள். எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை, சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை வீண் போவதில்லை.

கர்த்தர் சொல்கிறார்: "அவர் சிறியவனை புழுதியிலிருந்து தூக்கி விடுகிறார், எளியவனை குப்பையிலிருந்து உயர்த்துகிறார், அவனை பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப் பண்ணுகிறார்" சங்கீதம் 113-7,8.

மேலும் செய்திகள்