யார் உண்மையான இறைவிசுவாசி?
|உண்மையான இறை நம்பிக்கை, இறை விசுவாசம் கொண்டவர்கள் நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டும். தன்னுடைய மனஇச்சைக்கு இடம் கொடுக்காமல் இறை கட்டளையை நிறைவேற்றுவதில் முன்னுரிமை வழங்குபவர் ஆவார்.
ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டு நல்ல அமல்கள் (நற்காரியங்கள்) செய்தால் சுவனம் கிடைக்கும் என்றும், அந்த சுவனம் எப்படி இருக்கும் என்றும் திருக்குர்ஆன் இவ்வாறு விளக்குகிறது:
'(நபியே) யார் இந்த வேதத்தை விசுவாசித்து, இதில் கூறப்பட்டுள்ளபடி நல்ல அமல்களை செய்கிறார்களோ அவர்களுக்கு நீர் அருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனம் உண்டு என்று நன்மராயம் (சுபச்செய்தி) கூறுவீராக. அச்சுவனபதியில் அவர்களுக்கு உண்பதற்கு பழவகைகள் கொடுக்கப்படும். அந்த நேரத்தில் இப்போதுதானே பழங்கள் சாப்பிட்டோம் என்று கூறுவார்கள். ஆனால் ஒவ்வொரு பழத்தின் ருசியும் வேறு வேறு விதமாக இருக்கும், ஆனால் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும். பரிசுத்தமான துணைவியர் சுவனத்தில் அவர்களுக்கு உண்டு என்றும், அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் என்றும் நீங்கள் சுபச்செய்தி கூறுங்கள்' (திருக்குர்ஆன் 2:25) என்று இறை வசனம் சொல்லிக்காட்டுகிறது.
இந்த நிலையில் ஒருவர் ஈமான் கொண்டுள்ளார், ஆனால் அவரிடம் நல்ல செயல் இல்லை என்றாலோ, அல்லது நற்செயல் இருக்கிறது ஆனால் ஈமான் இல்லை என்றாலோ இரண்டுமே பயனற்றுப்போய்விடும். நாம் நல்லது என்று நினைத்து செய்வதெல்லாம் நல்ல செயலாக அமையாது. காரணம் நாம் எதை நன்மையான செயல் என்று எண்ணுகிறோமோ, அது மற்றவரின் பார்வையில் தீய செயலாக தோன்றும். அதுபோல நாம் எதை தீமையான செயல் என்று எண்ணுகிறோமோ, அது மற்றவரின் பார்வையில் நன்மையான செயலாக தோன்றும். எனவே நல்ல செயல்கள் என்பது இறைவனின் கட்டளைகளாகும். அவை இரண்டு வகைப்பட்டது.
1) ஏவப்பட்டது: அதாவது, செய்ய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டது. உதாரணமாக- தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்றவை.
2) விலக்கப்பட்டது: அதாவது, வட்டி வாங்குவது, மது அருந்துவது, அடுத்தவருக்கு துன்பம் கொடுப்பது, நெறி தவறி நடப்பது போன்றவை விலக்கப்பட்ட தீய செயல்கள்.
இறை நம்பிக்கை கொண்ட ஒரு மனிதனிடம் வரக்கூடிய நல்ல செயல் என்பது இறைவனால் ஏவப்பட்டதை செய்வது, இறைவனால் விலக்கப்பட்டதை விட்டும் விலகி இருப்பது போன்றவை ஆகும். இன்னும் விளக்கமாக சொல்வது என்றால், தன்னுடைய மனஇச்சைக்கு இடம் கொடுக்காமல் இறை கட்டளையை நிறைவேற்றுவதில் முன்னுரிமை வழங்குபவர் ஆவார்.
ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டவர் என்பதன் பொருள் என்னவென்றால், அவரது நம்பிக்கையில் 3 அம்சங்கள் இருக்க வேண்டும். அவை:
1) உள்ளத்தால் உண்மை என்று உறுதி கொள்ளுதல், 2) நாவால் (வார்த்தைகள்) மொழிதல் (சொல்லுதல்), 3) உடல் உறுப்புக்களால் நல்ல செயல்களை (இறைவனை வழிபடுதல் என்ற அடிப்படையில்) செயல்படுத்துதல். இந்த மூன்றில் ஒன்று இல்லை என்றாலும் ஈமான் என்பது இல்லாமல் போய்விடும்.
உண்மையான இறை நம்பிக்கை, இறை விசுவாசம் கொண்டவர்கள் கீழ்க்கண்ட 7 விஷயங்களில் நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டும். அவை...
1) அல்லாஹ் மீது நம்பிக்கை கொள்ளுதல். 2) இறைவன் வகுத்த சட்டங்கள் அனைத்தையும் ஏற்று முழுமையாக நடப்பேன் என்று உறுதியுடன் இருத்தல். 3) இறைவனின் படைப்பான வானவர்களை நம்புதல். 4) மனித சமுதாயம் சிறந்து விளங்க வேண்டும் என்று இந்த உலகிற்கு இறைவன் அருளிய திருக்குர்ஆன் மீது நம்பிக்கை கொள்ளுதல். 5) இறைவன் அனுப்பிய இறைத்தூதர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்குள் எந்தவித ஏற்றத்தாழ்வும் கருதக்கூடாது. 6) உலக வாழ்வில் எது நடந்தாலும் அது இறைவன் செயல் என்ற நம்பிக்கை வரவேண்டும். அதிகம் கிடைப்பதால் ஆணவம் கொள்ளாமலும், குறைவாக கிடைப்பதால் தாழ்வு மனப்பான்மை கொள்ளாமலும் 'எல்லாம் அவன் செயல்'என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும். 7) இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் மரணம் நிச்சயம் உண்டு. மரணத்துக்குப்பின் மறுமையில் மீண்டும் எழுப்பப்பட்டு நமது செயல்களுக்கான கேள்வி-கணக்குகள் கேட்கப்படும். அதற்கு ஏற்ப சொர்க்கம், நரகம் என்பது அளிக்கப்படும் என்பதில் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
இந்த 7 விஷயங்களிலும் முழுமையான நம்பிக்கை கொண்டவர் தான் உண்மையான இறை விசுவாசி, இறை நம்பிக்கை கொண்டவர் ஆவார். அதுபோல, அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் சிலவிஷயங்களை ஒன்றுடன் ஒன்றை தொடர்புபடுத்தி கூறிஇருக்கிறான். அதில் ஒன்றை விட்டுவிட்டால் மற்றொன்று இல்லாமல் போய்விடும். உதாரணமாக...
தொழுகையை நிலைநாட்டுங்கள், ஜகாத்தையும் கொடுங்கள் என்பதாகும். (திருக்குர் ஆன் 2:43). இதில் ஒன்றை மட்டும் செய்து மற்றொன்றை விட்டுவிட்டால் இரண்டுமே இல்லாமல் போய்விடும். இதுபோல... அல்லாஹ்விற்கு கட்டுப்படுங்கள், (ரசூலுக்கு) இறைத் தூதருக்கும் கட்டுப்படுங்கள். (திருக்குர்ஆன் 3:32). இதில் ஒருவரை ஏற்று மற்றவரை புறக்கணித்தால் இரண்டையும் ஏற்றுக்கொள்ளாதது போலவே ஆகும்.
எனக்கும் நன்றி செலுத்துங்கள், உங்கள் பெற்றோருக்கும் நன்றி செலுத்துங்கள். (திருக்குர்ஆன் 31:14). இறைவனுக்கு நன்றி செலுத்தி விட்டு பெற்றோரை புறக்கணித்தால் எந்த பலனும் இல்லை. அதுபோலவே பெற்றோருக்கு மட்டும் நன்றியுடன் இருந்தால் இறைவனை புறக்கணிப்பவராகி விடுவார்.
உண்மையான விசுவாசியாக வாழக்கூடிய நற் பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருளு வானாக, ஆமின்.