நோன்பு பெருநாள் தர்மம்
|பொருளாதாரத்தை இஸ்லாம் பரவலாக்கிட முன் வைத்த யோசனைதான் ‘ஸதகா’ எனும் தர்ம நிதி வழங்கலும், ‘ஜகாத்’ எனும் கட்டாய ஏழைவரி செலுத்துதலும் ஆகும்.
இஸ்லாத்தில் பொருளாதாரக் கடமையும் உண்டு. நாம் சம்பாதித்த பொருளாதாரத்தில் நாமே முழு அதிகாரமும், சுதந்திரமும் உடையவர்கள். இதில் மாற்றுக்கருத்துக் கிடையாது. எனினும், பொருளாதாரக் குவியல் ஒரு சார்பு உடையதாக, ஒரு பக்கமாக மட்டுமே சாய்ந்துவிடக் கூடாது என்பதற்காக இஸ்லாம் பொருளாதார பரவல் கொள்கையை முன் வைக்கிறது.
'பல்வேறு ஊராரிடமிருந்து எதை தனது தூதர் கைப்பற்றுமாறு அல்லாஹ் செய்தானோ அது அல்லாஹ்விற்கும், இத்தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும்; மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்கு உள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப்பட்டுள்ளது)'. (திருக்குர்ஆன் 59:7)
பொருளாதாரத்தை இஸ்லாம் பரவலாக்கிட முன் வைத்த யோசனைதான் 'ஸதகா' எனும் தர்ம நிதி வழங்கலும், 'ஜகாத்' எனும் கட்டாய ஏழைவரி செலுத்துதலும் ஆகும். இதுபோக பல்வேறு தர்மநிதி வழங்கல் ஆலோசனைகளை வழங்குகிறது. 'ஸதகா ஜாரியா' எனும் நிலையான தர்மம் வழங்கல் குறித்து இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது.
காலாகாலத்திற்கும் நிலைபெற்று இருக்கக்கூடிய தர்மம் என்னவெனில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஒரு கிணற்றை, அல்லது ஒரு குடிநீர் தொட்டியை ஏற்படுத்திக் கொடுப்பது, அல்லது ஒரு கல்வி சாலையை நிறுவுவது, அல்லது உயிர்காக்கும் உயரிய மருத்துவமனையை கட்டித் தருவது போன்றவை நிலையான தர்மத்தின் வகைகளில் வருகிறது. நீண்ட கால சேவை மனப்பான்மையுடன் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அர்ப்பணிக்கப்படும் அனைத்துமே நிலையான தர்மம் தான்.
'ஸதகா' எனும் 'தர்மநிதி' ஆண்டாண்டு காலம் செய்யப்படுவது. 'ஜகாத்' எனும் 'கட்டாய ஏழைவரி' ஆண்டுக்கு ஒரு முறை செய்யப்படுவது. 'ஸதகா ஜாரியா' எனும் 'நிலையான தர்மம்' நீண்டநெடிய காலத்திற்காக செய்யப்படுவது.
இதுபோக, 'ஜகாதுல் பித்ர்' எனும் நோன்புப் பெருநாள் அன்று வழங்கப்படும் தானிய தர்மமும் உண்டு. இது ஹிஜ்ரி 2-ம் ஆண்டு கடமையாக்கப்பட்டது.
'நபி (ஸல்) அவர்கள் ஒரு 'ஸாவு' அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையையோ நோன்புப் பெருநாள் தர்மமாகக் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள். மக்கள் ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமைக்குப் பகரமாக அரை ஸாவு அளவு தீட்டிய கோதுமையைக் கொடுத்தார்கள்'. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)
'சிறியவர் - பெரியவர், சுதந்திரமானவர் - அடிமை, அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரீச்சம் பழமோ அல்லது தீட்டாத கோதுமையையோ (ஏழைகளுக்கு) நோன்புப் பெருநாள் தர்மமாகக் (கொடுப்பதை) நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்'. (அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)
'நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெருநாள் அன்று ஒரு ஸாவு உணவை தர்மமாகக் கொடுத்து வந்தோம். அக்காலத்தில் தீட்டாத கோதுமையும், உலர்ந்த திராட்சையும், பாலாடைக்கட்டியும், பேரீச்சம் பழமும்தான் எங்களின் உணவாக இருந்தது'. (அறிவிப்பாளர்: அபூஸயீத் குத்ரி (ரலி), நூல்: புகாரி)
'நபி (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாள் தர்மத்தை பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்'. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)
'பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே நபித்தோழர்கள் இந்த தர்மத்தைக் கொடுத்து வந்தார்கள்'. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)
இந்த தர்மத்தை இஸ்லாம் கடமையாக்கியதற்கு இரண்டு காரணங்களாகும். 1) ஒரு நோன்பாளி நோன்பு சமயத்தில் ஏற்பட்ட தவறுகளிலிருந்து அவரை இந்த தர்மம் தூய்மைப்படுத்துகிறது. 2) அதை வாங்கி சாப்பிடுவதினால் ஏழைகளின் பசியும் பறந்து விடுகிறது.
பசியில்லாத உலகை கட்டமைக்கவும், பசியில்லா பெருநாளை அனைவரும் சமமாக கொண்டாடவும் இத்தகைய தர்ம சிந்தனையை இஸ்லாம் விதைக்கிறது. நோன்புப் பெருநாள் தொழுகையை இஸ்லாம் தாமதமாக வைத்ததே, பெருநாள் தர்மத்தை ஏழைகளுக்கு வழங்கிட சிறிய அவகாசத்தை எடுத்துக் கொள்வதற்காகத்தான்.
மேலும், குர்பானி பெருநாள் தொழுகையை இஸ்லாம் சீக்கிரமாக வைத்ததே, குர்பானி இறைச்சிகளை ஏழைகளுக்கு சீக்கிரமாக வழங்கிட வேண்டிதான். இரு பெருநாள் தொழுகைகளின் நேரங்களும் ஏழைகளின் வசதிக்காகத்தான் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
நோன்புப் பெருநாள் தர்மம் என்பது ஒரு நபருக்கு ஒரு ஸா அளவு வீதம் வழங்கிடவேண்டும். ஒரு ஸா என்பது 2¼ முதல் 2½ வரை நிறுத்தல் அளவாகும். ஒரு குடும்பத்தில் எத்தனை நபர்கள் உண்டோ அதற்கு தகுந்தாற்போல் கணக்கிட்டு ஏழைகளுக்கு பெருநாள் தொழுகைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பே வழங்கிட வேண்டும்.
'தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான். மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்'. (திருக்குர்ஆன் 87:14,15)