குழந்தை வரம் தரும் ஈசன்
|விக்ரம சோழனின் ஆட்சியில் மந்திரியாக இருந்தவர், இளங்காரார். இவர் திருக்கடவூர் கோவில் திருப்பணிகளில் ஈடுபட்டிருந்தார். அதேநேரம், தில்லையாடி திருக்கோவிலையும் புதுப்பிக்க பொருளுதவி செய்து கொண்டிருந்தார். இந்த விஷயம் மன்னனுக்கு சில காலம் கழித்தே தெரியவந்தது. உடனே மந்திரியை அழைத்து, தில்லையாடி கோவிலின் திருப்பணிக்கான புண்ணிய பலனை தனக்கு தத்தம் செய்யும்படி கேட்டான். மந்திரி மறுத்தார். அதனால் கோபம் கொண்ட சோழ மன்னன், தன்னுடைய வாளால் மந்திரியின் கையை வெட்ட முயற்சித்தான். அப்போது ஈசன் பேரொளியுடன் மந்திரிக்கு காட்சி தந்தார்.
ஆனால் அந்த ஒளியை பார்க்க இயலாமல், மன்னனின் பார்வை பறிபோனது. தன் தவறை உணர்ந்த அரசன் கதறினான். தில்லையாடி சரணாக ரட்சகர் ஆலயத்திற்குச் சென்று இறைவனை பூஜித்து,மீண்டும் பார்வை கிடைக்கப்பெற்றான். இந்த ஆலயம் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள். ஆடிப்பூரத்தன்று இங்கு நடைபெறும் சந்தான பரமேஸ்வரி ஹோமத்தில் கலந்து கொண்டு, அம்பாளுக்கு வளையல் சாத்தியும், அவளின் சன்னிதியில் தொட்டில் கட்டியும் பிரார்த்தித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் எடைக்கு எடை கற்கண்டு சமர்ப்பித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அதுபோன்று புரட்டாசி நவராத்திரியின் போது அம்பாளுக்கு, ராஜேஸ்வரி அலங்காரம் செய்து வழிபட, திருமணத் தடைகள் நீங்குமாம். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தில்லையாடி திருத்தலம், திருக்கடையூரில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து 26 கிலோ மீட்டர் தூரத்திலும், நாகப்பட்டினத்தில் இருந்து 37 கிலோ மீட்டர் தொலைவிலும் இத்தலம் இருக்கிறது.