ஈரோடு
ஆடிப்பெருக்கையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
|ஆடிப்பெருக்கையொட்டி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆடிப்பெருக்கையொட்டி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சத்தியமங்கலம்
ஆடிப்பெருக்கு நாள் நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாவட்டத்தின் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று ஆடிப்பெருக்கு என்பதால் பக்தர்கள் கூட்டம் பண்ணாரி அம்மன் கோவிலில் அதிக அளவில் காணப்பட்டது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்து நின்றனர். 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து கோவிலின் முன்பு குண்டம் இருந்த பகுதிக்கு பக்தர்கள் வந்தனர். அங்கு அவர்கள் தாங்கள் கொண்டு வந்த உப்பு மற்றும் மிளகை குண்டம் உள்ள பகுதியில் தூவி தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.
ஆடிப்பெருக்கையொட்டி பக்தர்கள் வசதிக்காக சத்தியமங்கலத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் கோவில் சார்பில் காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. கோவில் பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையில் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கொடுமுடி
கொடுமுடியில் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மகுடேஸ்வரர், வடிவுடைய நாயகி, பிரம்மா, ஆஞ்சநேயர், மகாலட்சுமி, வீரநாராயண பெருமாள், சனீஸ்வரர் சன்னதி, காலபைரவர், நவக்கிரகங்கள் ஆகிய சன்னதிகளுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்து நின்று சாமியை தரிசனம் செய்தனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக கொடுமுடி காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், ஆற்றுக்கு செல்லும் பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் காவிரியில் குளிக்க முடியாததால் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் பரிகாரம் செய்யவும் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் காவிரிக்கரை வெறிச்சோடி காணப்பட்டது. கொடுமுடி பேரூராட்சி சார்பில் கோவிலுக்கு வந்த ஆண் மற்றும் பெண் பக்தர்கள் குளிப்பதற்கு ஏதுவாக தனித்தனியாக ஷவர் குளியல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பக்தர்கள் குளித்து சாமியை வழிபட சென்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி சுகுமார் (பொறுப்பு) மற்றும் ஊழியர்கள் செய்திருந்தார்கள். இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் பாதுகாப்பு உபகரணங்களுடன் காவிரி கரையில் தயார் நிலையில் இருந்தனர். கொடுமுடி பேரூராட்சி பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.
கோபி
கோபி வடக்கு வீதியில் உள்ள பெரம்பலூர் முத்து மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி விசேஷ பூஜை நடந்தது. அப்போது அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள், விபூதி, சந்தனம், குங்குமம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்து சென்றனர்.
கோபி மாதேசியப்பன் விதியில் உள்ள மாதேஸ்வரன் கோவிலிலும், கோபி சாரதா மாரியம்மன் ேகாவிலிலும் ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு மாதேஸ்வரன், சாரதா மாரியம்மன் அருள்பாலித்தனர்.
பாரியூர்
கோபி அருகே பாரியூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. ஆடிப்பெருக்கையொட்டி கோவில் நடை காலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம, மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ேமலும் கோவில் முன்பு உள்ள குண்டம் பகுதியில் பக்தர்கள் விளக்கு ஏற்றியும் வழிபட்டனர்.
இதேபோல் பவளமலை முத்துக்குமாரசாமி கோவில், பச்சைமலை பாலமுருகன் கோவில், கோபி ஆஞ்சநேயர் கோவில், அளுக்குளி செல்லாண்டியம்மன் ேகாவில், கொளப்பலூர் பச்சைநாயகி அம்மன் கோவில், கோபி வேலுமணி நகர் சக்தி விநாயகர் கோவில், கோபி வாய்க்கால் ரோடு மாதேஸ்வரன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஊஞ்சலூர்- அந்தியூர்
ஊஞ்சலூர் காவிரிக்கரையில் உள்ள ராகு கேது தலம் என அழைக்கப்படும் நாகேஸ்வரர் கோவில் நடை ஆடிப்பெருக்கையொட்டி நேற்று அதிகாலையிலேயே திறக்கப்பட்டது. இதையடுத்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
இதேபோல் கொளாநல்லி பாம்பலங்கார சாமி கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், கொந்தளம் நாகேஸ்வரர் கோவில் மற்றும் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
சென்னிமலை
ஆடிப்பெருக்கையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று காலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கோமாதா பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முருகப்பெருமானுக்கு ஆடி மாத சிறப்பு பூஜைகள் மற்றும் வழக்கமாக நடைபெறும் 6 கால பூஜைகள் நடைபெற்றது. அப்போது முருகப்பெருமான் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஈரோடு, திருப்பூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முருகனை தரிசனம் செய்தனர். இதேபோல் சென்னிமலை அருகே உப்பிலிபாளையம் பொடாரம்மன் கோவிலிலும் ஆடி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.