< Back
ஆன்மிகம்
துன்பங்களுக்கு தீர்வு தரும் துர்க்கை வழிபாடு
ஆன்மிகம்

துன்பங்களுக்கு தீர்வு தரும் துர்க்கை வழிபாடு

தினத்தந்தி
|
7 Jun 2022 7:38 PM IST

துர்க்கை அம்மன் வழிபாடு என்பது மிகவும் விசேஷமானது. ஒவ்வொரு தினமும் ஒரு குறிப்பிட்ட வேளையில், துர்க்கை அம்மனை வழிபடும்போது, நாம் வைக்கும் கோரிக்கைகளை அம்பாள் நிறைவேற்றித் தருவார் என்பது ஐதீகம்.

திருமணத் தடையால் அவதிப்படுபவர்கள், அதில் இருந்து வெகு விரைவாக விடுபடுவார்கள் என்பதும் அசைக்க முடியாத நம்பிக்கை. துர்க்கை அம்மனை எந்த தினங்களில் எப்படி வழிபடலாம் என்பதை இங்கே பார்ப்போம்.

ஞாயிறு: ஆலயங்களில் காட்சி தரும் துர்க்கைக்கு, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள், புதிய வெள்ளைத் துணியில் திரி செய்து விளக்கேற்றி வழிபட வேண்டும். அப்போது சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைக்க வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகும். அதோடு எல்லா நலன்களும் உண்டாகும்.

திங்கள்: திங்கட்கிழமைகளில் காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள், துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து, வெண் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும். மேலும் வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிடைக்கும்.

செவ்வாய்: ராகு கால நேரமான மாலை 3 மணி முதல் 4.30 மணிக்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்தியம் படைத்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

புதன்: மதியம் 12 மணி முதல் 1.30 மணிக்குள் பஞ்சில் திரி செய்து விளக்கேற்றி, புளியோதரை நைவேத்தியம் படைத்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிடைக்கும். மேலும் ரத்த சம்பந்தமான நோய் ஏதாவது இருந்தால், அது நீங்கும்.

வியாழன்: வியாழக்கிழமைகளில் மதியம் 1.30 மணி முதல் 3 மணிக்குள் விளக்கேற்றி, எலுமிச்சம் பழம் சாதம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். மேலும் இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

வெள்ளி: வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து ராகுகால நேரமான காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் துர்க்கையை வழிபட வேண்டும். இது மற்ற நாட்களை விட, மிகவும் ஏற்றம் தரும் காலம் ஆகும். எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் சாதம் அல்லது பாயசம் நைவேத்தியமாக படைக்க வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும்.

சனி: சனிக்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் மஞ்சள் துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலைவாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும்.

மேலும் செய்திகள்