நாளை முதல் திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசனத்துக்கான இலவச டோக்கன்கள் வினியோகம்
|தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் 24 மணி நேரத்துக்கு முன் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தான இணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 23-ந்தேதி அதிகாலை 1.45 மணிக்கு 'சொர்க்கவாசல்' திறக்கப்படுகிறது. அன்று முதல் ஜனவரி 1-ந்தேதி வரை சொர்க்கவாசலை தரிசன செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசனத்துக்கான இலவச டோக்கன்கள் நாளை முதல் வினியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சொர்க்கவாசல் தரிசன இலவச டோக்கன்கள் வினியோகம் செய்வதற்காக திருப்பதியில் 9 மையங்களில் 90 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தேவஸ்தான இணை அதிகாரி சதாபார்கவி கூறியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 23-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை சொர்க்க வாசல் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். சொர்க்கவாசல் தரிசனத்துக்காக 9 மையங்களில் 90 கவுண்ட்டர்களில் நாளை (22-ந்தேதி) மதியம் 2 மணியில் இருந்து இலவச தரிசன டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட உள்ளன.
இந்தக் கவுண்ட்டர்களில் ஒதுக்கீடு முடியும் வரை 4 லட்சத்துக்கும் அதிகமான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் 24 மணி நேரத்துக்கு முன் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். தரிசன டோக்கன்கள் உள்ளவர்கள் மட்டுமே திருமலை கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் திருமலைக்கு செல்லலாம். ஆனால், சாமி தரிசனம் செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.