திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 30 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
|திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
திருமலை,
கோடை விடுமுறையையொட்டி வார இறுதி நாட்களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அந்தக் கூட்டம் திருமலையில் வெளிவட்ட சாலையில் உள்ள சிலாத்தோரணம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் வரை காணப்படுகிறது.
பக்தர்களின் வசதிக்காக ஆக்டோபஸ் பவனில் இருந்து சீலாத் தோரணம் வரை 8 சிறப்புப் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, ஒவ்வொரு நிமிடமும் பக்தர்களை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தரிசன வரிசைகளில் நெரிசல் ஏற்படாமல் இருக்க திருமலை-திருப்பதி தேவஸ்தான பறக்கும் படை ஊழியர்கள் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 5 மணி வரை கோவிலில் 46 ஆயிரத்து 486 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்தில் பக்தர்கள் வழிபட 30 மணி நேரம் ஆகிறது. இதுதவிர அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு ஆகிய இரு நடைபாதைகளில் கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.
கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஜூன் மாதம் 30-ந்தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.