திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்.. 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம்
|கடலிலும் நாழி கிணறு புனித தீர்த்தத்திலும் பக்தர்கள் நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.
அவ்வகையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்தனர். கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கூட்டம் அலைமோதியதால் 100 ரூபாய் கட்டண வரிசை மற்றும் பொது தரிசன வரிசையில் பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இன்று வழக்கம் போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
கோவில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள் அமருவதற்கு போதிய இட வசதிகள் இல்லை. எனவே, பக்தர்கள் தரிசன வரிசை பகுதியில் மற்றும் நடைபாதைகளில் அமர்ந்து ஓய்வு எடுத்தனர்.