வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
|பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முருகபெருமானின் 3ம் படை வீடு அமைந்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் என வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் பழனிக்கு வார விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மற்றும் முகூர்த்தநாள் என்பதால் பழனி அடிவார பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் பல்வேறு விஷேசங்கள் நடைபெற்றது. மேலும் பஸ்நிலையம், அடிவாரம், படிப்பாதை, யானைப்பாதை, ரோப்கார் நிலையம், மின்இழுவை நிலையம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மலைக்கோவிலில் திரண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களின் வாகனங்களும் அதிகரித்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் இதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.