< Back
ஆன்மிகம்
அபுதாபி இந்து கோவிலில் குவியும் பக்தர்கள் கூட்டம்; நெரிசலை கட்டுப்படுத்த புதிய முன்பதிவு முறை அறிவிப்பு
ஆன்மிகம்

அபுதாபி இந்து கோவிலில் குவியும் பக்தர்கள் கூட்டம்; நெரிசலை கட்டுப்படுத்த புதிய முன்பதிவு முறை அறிவிப்பு

தினத்தந்தி
|
10 April 2024 7:58 PM IST

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான இந்து கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதை தொடர்ந்து புதிய முன்பதிவு முறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அபுதாபி,

அபுதாபி முரைக்கா பகுதியில் கட்டப்பட்ட பிரமாண்டமான இந்து கோவில் கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த மார்ச் 1-ந்தேதி முதல் பொதுமக்கள் வழிபாட்டுக்கு திறக்கப்பட்ட இந்த கோவிலில் நாள்தோறும் கூட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் சென்று வருகிறது. நேற்று முன்தினம் தெலுங்கு வருட பிறப்பான உகாதி மற்றும் மராட்டியர்களின் முக்கிய பண்டிகையான குடி பாடவா ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் அபுதாபி கோவிலில் திரண்டனர். உள்ளே செல்ல முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் காணப்பட்டது. கட்டுக்கடங்காத கூட்டத்தால் அந்த வளாகம் திணறியது. மேலும் வரும் வாரங்களில் பைசாகி பண்டிகை, விஷு, தமிழ் வருடப்பிறப்பு, பிஹூ, ராமநவமி மற்றும் அனுமன் ஜெயந்தி போன்ற முக்கிய விழாக்கள் வர உள்ளதால் கூடுதலாக மக்கள் கூட்டம் அலைமோதும் வாய்ப்புள்ளது.

இதனை கவனத்தில் கொண்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, அபுதாபி இந்து கோவிலை நிர்வகித்து வரும் பி.ஏ.பி.எஸ் அமைப்பு சார்பில் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி இனி இந்து கோவிலுக்கு சென்று வழிபட சிறப்பு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளும் முறையில் தாங்கள் விரும்பும் தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

வாரந்தோறும் செவ்வாய்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை கோவிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும். திங்கட்கிழமைகளில் கோவில் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து மேலும் விவரங்களுடன் முன்பதிவு செய்துகொள்ள https://www.mandir.ae/visit என்ற இணையதள முகவரியை அணுகுமாறு அந்த அமைப்பு பொதுமக்களை அறிவுறுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்