ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் திவ்ய தரிசன டோக்கன்களை ஸ்கேன் செய்தால் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்
|ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் வரும் பக்தர்கள் திவ்ய தரிசன டோக்கன்களை ஸ்கேன் செய்தால் மட்டுமே சாமி தரிசனம் செய்யலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவர்களுக்கு அடிவாரத்தில் திவ்ய தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது. அந்த டோக்கன்களை பெற்ற பக்தர்கள் நடந்து சென்று ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பது விதி.
ஆனால், ஒருசில பக்தர்கள் அடிவாரத்தில் திவ்ய தரிசன டோக்கன்களை பெற்று மாற்று வழியில் திருமலையை அடைந்து, சாமி தரிசனம் செய்வதாக, திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் திவ்ய தரிசன டோக்கன்களை ஸ்கேன் செய்யும் முறையை மீண்டும் தொடங்கி உள்ளது. இதற்கான சோதனை முறை நேற்று நடந்தது.
இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஸ்ரீவாரிமெட்டுவில் திவ்ய தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 1200-வது படியில் ஸ்கேன் செய்ய வேண்டும். அப்படி ஸ்கேன் செய்யும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்யலாம்.
திவ்ய தரிசன டோக்கன்களை ஸ்கேன் செய்யாத பக்தர்கள், திருமலையை அடைந்ததும், தரிசன வரிசையில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே பக்தர்கள் இந்த நடைமுறையை கவனித்து, அதன்படி சாமி தரிசனத்துக்கு வர வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.