ராமேஸ்வரம் -காசி... அரசு செலவில் ஆன்மீக பயணம் செல்ல விருப்பமா..? சீக்கிரமா அப்ளை பண்ணுங்க
|ஆன்மிகப் பயணம் செல்ல அறநிலையத் துறையின் 20 மண்டலங்களில், தலா 15 பேர் வீதம் மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சென்னை:
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் இருந்து காசி விஸ்வநாத சுவாமி கோயிலுக்கு ஆன்மிகப் பயணமாக 300 பேர் அழைத்துச் செல்லப்பட உள்ளதாகவும், அதற்கான செலவினத் தொகை ரூ.75 லட்சத்தை அரசே ஏற்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆன்மிகப் பயணம் செல்ல இந்து அறநிலையத் துறையின் 20 மண்டலங்களில், தலா 15 பேர் வீதம் மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பப் படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய இணைப்புகளுடன், அதே அலுவலகத்திற்கு நவம்பர் 20-ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 முதல் 70 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆன்மிகப் பயணத்துக்கு தேர்வு செய்யப்படுவர். கூடுதல் விவரங்களை www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொண்டு பயன்பெறலாம்.