< Back
ஆன்மிகம்
கர்த்தரையே சார்ந்து கொள்ளுங்கள்
ஆன்மிகம்

கர்த்தரையே சார்ந்து கொள்ளுங்கள்

தினத்தந்தி
|
25 Aug 2022 3:00 PM IST

எந்த சூழ்நிலையிலும் மனுஷருடைய பலத்தையோ, பணத்தையோ சார்ந்து கொள்ள வேண்டாம். நிச்சயம் தேவன் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்.

தேவ பிள்ளைகளே! உங்களுக்கு ஒத்தாசை செய்யக்கூடிய ஆட்கள் உடன் இருந்தாலோ அல்லது யாருடைய உதவியும் எனக்கு அவசியம் இல்லை. வேலை, பணம், உலக அறிவு மற்றும் ஞானம் அனைத்தும் எனக்குண்டு. என்னுடைய சொந்த கால்களால் என்னால் நிற்க இயலும். எவரையும் சார்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்ற எண்ணங்களோடு இருந்தாலோ அவற்றை எல்லாம் அப்புறப்படுத்தி நம் அருமை ஆண்டவரை சார்ந்து கொள்ளப் பழகுங்கள்.

அதுவே உங்களுக்கு இவ்வுலகத்தில் ஜெயம் உள்ள வாழ்க்கையை கொண்டு வரும். எல்லாவற்றிற்கும் மேலாக நித்திய வாழ்வுக்கு நம்மைக் கொண்டு போய் சேர்க்கும்.

'இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம்'. (ஏசாயா 26:13)

எந்த பிரச்சினை ஆனாலும் அதற்கு பரிகாரம் உண்டு என்பதை மறந்து போகாதீர்கள். கர்த்தருக்குள் திடமனதாயிருங்கள். எந்த சூழ்நிலையிலும் மனுஷருடைய பலத்தையோ, பணத்தையோ சார்ந்து கொள்ள வேண்டாம். நிச்சயம் தேவன் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்.

உங்கள் பிள்ளைகளின் படிப்பு, திருமண காரியங்கள் மற்றும் பிள்ளைகளுடைய எதிர்காலம் எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் குடும்பத்தின் நல்ல உறவு அனைத்திற்கும் ஆண்டவரையே சார்ந்திருங்கள். இதுவரை நீங்கள் எப்படியோ இனி, 'கர்த்தாவே உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தை பிரஸ்தாபப்படுத்துவோம்' என தீர்மானியுங்கள்.

நமது ஆன்மிக வாழ்வில் இரண்டு காரியங்கள் மிகவும் அவசியம்.

1. தேவன் அருளும் ஆசீர்வாதங்கள், 2. தேவன் அருளும் வெற்றியுள்ள வாழ்வு.

இவை இரண்டில் எதை இன்றைக்கு மக்கள் அதிகமாக நாடுகிறார்கள் என்று கேட்டால், ஆசீர்வாதம் மட்டும் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் நமது பரிசுத்த வேதம் மற்றும் நமது ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட அனை வரும் ஜெயமுள்ளவராகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

அபியா மரணமடைந்த பிறகு அவருடைய மகன் ஆசா ராஜாவாகிறார். அவரும் தகப்பனைப் போல யுத்தங்களை சந்திக்கிறார். 3 லட்சம் கேடகம் பிடிக்கிறவர்களும், வில்லை நானேற்றுகிற 2,80,000 பேரும் ஆசாவிற்கு இருந்தார்கள்.

அதே வேளையில் தன்னை எதிர்த்து வந்த எத்தியோப்பியனாகிய சேராவுக்கு 10 லட்சம் சேனைகளும் 300 ரதங்களும் இருந்தன. மேலும் சேரா எகிப்தின் ஆவியுடையவன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

இவை எல்லாவற்றையும் ஆசா தெளிவாக அறிந்தபடியால் "கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்..." (2 நாளா 14:11) என்று பிரார்த்தனை செய்கிறார்.

கர்த்தருடைய பிள்ளைகளே! இப்பொழுது உங்கள் சூழ்நிலை என்ன? சகலவற்றிலும் நீங்கள் குன்றி குறுகிப்போனாலும், கர்த்தருடைய கரம் குறுகவில்லையே. அவர் என்ன செய்தார் என்பதை கீழ்கண்ட வசனத்தை வாசித்து கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்.

"அவர்களை ஆசாவும் அவனோடிருந்த ஜனங்களும் கேரார் மட்டும் துரத்தினார்கள். எத்தியோப்பியர் திரும்ப பலங்கொள்ளாதபடிக்கு முறிந்து விழுந்தார்கள். கர்த்தருக்கும் அவருடைய சேனைக்கும் முன்பாக நொறுங்கிப்போனார்கள்". (2 நாளா. 14:13)

"அக்காலத்திலே ஞானதிருஷ்டிக்காரனாகிய அனானி யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் வந்து அவனை நோக்கி: நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொள்ளாமல், சீரியாவின் ராஜாவைச் சார்ந்துகொண்டபடியினால், சீரியா ராஜாவின் ராணுவம் உமது கைக்குத் தப்பிப்போயிற்று" (2 நாளா.16:7)

பிரியமானவர்களே! இந்நாட்களிலும் இச்சம்பவம் சபைகளிலும் குடும்பங்களிலும் நடைபெற்று வருகிறது. மிகுந்த எச்சரிக்கையோடு கர்த்தர் ஒருவரையே சார்ந்திருக்க வேண்டும். தேவன் தாமே சகலவற்றிலும் உங்களுக்கு துணை நின்று உங்களை காப்பாராக!

மேலும் செய்திகள்