< Back
ஆன்மிகம்
பாவங்களை போக்கும் பாடலீஸ்வரர்
ஆன்மிகம்

பாவங்களை போக்கும் பாடலீஸ்வரர்

தினத்தந்தி
|
20 Jun 2023 6:31 PM IST

கடலூர் நகரில் அமைந்த திருப்பாதிரிப்புலியூரில் பெரியநாயகி அம்மன் உடனாய பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. நடுநாடு என பெயர் பெற்று விளங்கும் இந்தக் கோவில் பாடல் பெற்ற 22 தலங்களில் 18-வது தலமாக விளங்குகிறது.

இவ்வாலய இறைவன், பாடலீஸ்வரர், கன்னிவனநாதர், தோன்றா துணையுடைய நாதர், கடைஞாழலுடைய பெருமான், சிவகொழுந்தீசன், உத்திரசேனன், பாடலநாதர், கரையேற்றும்பிரான் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார். அதே போல் அம்பாளும் பெரியநாயகி, லோகாம்பிகை, அருந்தவ நாயகி, பிரஹன்நாயகி ஆகிய பெயர்களால் போற்றப்படுகிறார். 12 வகையான பூக்களை பூக்கும் பாதிரி மரம், இவ்வாலயத்தின் தல விருட்சமாக உள்ளது. இந்த மரம் செப்பு தகடுகளால் வேயப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மரம் இதுவாகும். இத்தலத்தில் சிவகரை, பிரம்மதீர்த்தம் (கடல்), சிவகரதீர்த்தம் (குளம்), பாலோடை, கெடிலநதி மற்றும் தென்பெண்ணையாறு ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.

பாதிரி தல விருட்சமாக உள்ளதாலும், புலிக்கால் முனி வர் எனும் வியாக்ரபாதர் வழிபட்டதாலும் இவ்வூர் திருப்பாதிரிப்புலியூர் என்று அழைக்கப்பட்டது. உபமன்னியர் முனிவர் வழிபட்டு, தன்னுடைய முயல் வடிவத்தில் இருந்து சாப விமோசனம் பெற்ற தலமாகவும் இது விளங்கி வருகிறது. இது தவிர அகத்தியர், மங்கணமுனிவர், ஆதிராசன் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலமாக உள்ளது.

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் 21 கல்வெட்டுகள் உள்ளன. இதில் சோழமன்னர்கள் காலத்தில் உள்ள 19 கல்வெட்டுகளும், விக்கிரமபாண்டியன் காலத்தை சேர்ந்தது ஒன்றும், விஜயநகர பரம்பரை வீரவிருப்பண்ண உடையார் காலத்தை சேர்ந்தது ஒன்றும் உள்ளது. இந்த கல்வெட்டுகள் மூலம் தேவதானம், பிரமதேயம், ஆகத்தானம் கொடுக்கப்பட்ட செய்திகள் வெளிப்படுகிறது.

தல வரலாறு

உலக உயிர்கள் நலம்பெறுவதற்காக, சிவன் அவ்வப்போது பல திருவிளையாடல்களை நிகழ்த்துவதுண்டு. அதில் ஒன்றுதான் பார்வதியுடன் சேர்ந்து இறைவன் சொக்கட்டான் என்னும் பகடைக்காய் விளையாடியது. இந்த பகடைக்காய் விளையாடுவதற்காக அன்னையின் தோழிகள் மாணிக்க கல், மரகதப் பலகை, வைரத்தாலான பகடை கருவிகள் தந்து பகடையாடச் செய்தனர். ஆட்டம் விறுவிறுப்பாக நடந்தது. இதில் ஒவ்வொரு முறையும் அம்பிகையே வெற்றி பெற்றார். ஆனால் ஈசனோ, தான் வெற்றி பெற்றதாகக் கூறினார். அருகில் இருந்து ஆட்டத்தைக் கவனித்து கொண்டிருந்த திருமால், உண்மையை கூறினால் மற்றொருவரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் எனக்கருதி 'ஆட்டத்தை கவனிக்கவில்லை' எனக் கூறிவிட்டார். இதனால் அம்பாளுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. உடனே பார்வதி தேவி, "இறைவன் திருக்கண்களை மறைப்பேன். அதைத்தாண்டி ஒளி தந்தால் இறைவன் வெற்றி பெற்றதாகவும், ஒளி தராவிட்டால் நான் வெற்றி பெற்றதாகவும் ஒப்புக்கொள்ள வேண்டும்" என்று சொல்லி இறைவனின் கண்களை மூடினார். அடுத்த நொடி அண்டசராசரங்களும் இருளில் மூழ்கின. அனைத்து இயக்கங்களும் செயல்களும் நின்று போயின. ஒரு கணமே நீடித்த இந்த நிகழ்வு, தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பல யுகங்களாக நீடித்தது. பதறிப்போன இறைவி, சிவனின் கண்களில் இருந்து கரத்தை எடுத்துவிட்டு தன் செயலால் ஏற்பட்டு விட்ட விபரீதத்திற்கு மனம் வருந்தினார். தன்னை மன்னித்து அருளும்படி ஈசனிடம் வேண்டினார். இறைவனோ, "நீ பூலோகம் சென்று அங்குள்ள 1008 சிவ தலங்களை தரிசித்து வா. அப்படி நீ தரிசிக்கும் போது, எந்த தலத்தில் உனது இடது கண்ணும், இடது தோளும் துடிக்கின்றதோ, அந்த தலத்தில் உன்னை நான் ஆட்கொள்வேன்" என்று அருளினார்.

அதன்படி பார்வதிதேவி ஒவ்வொரு சிவாலயமாக தரிசித்தபடி வந்தார். அதன் ஒரு பகுதியாக பாதிரி வனமாக திகழ்ந்த இந்த தலத்திற்கு வந்து இறைவனை தரிசித்தார். அப்போது அன்னையின் இடது கண்ணும், இடது தோளும் துடித்தன. அந்த தலத்தில் அன்னை கடும் தவம் செய்தார். அரூபமாக இருந்து இறைவனை பூஜித்து வந்தார். பூஜைக்கு இறங்கிய இறைவன் அம்பாளை திருமணம் செய்தார் என்று வரலாறு கூறுகிறது.

கோவில் அமைப்பு

இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்திற்கு பக்கத்தில் சிவகர தீர்த்தம் உள்ளது. முன் மண்டபமும், அதையடுத்து 7 நிலை ராஜகோபுரமும் அமைந்துள்ளது. கோபுரத்தில் ஏராளமான சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. வாசலை கடந்து உள்ளே சென்றால் உயரத்தில் பலிபீடம், செப்புக் கவசம் இடப்பட்ட கொடிமரம் மற்றும் நந்தி உள்ளது. இங்கிருந்தே இறைவனை தரிசிக்கலாம்.

வெளிபிரகார வலம் முடித்து துவார விநாயகர், துவார சுப்பிரமணியர் ஆகியோரை வணங்கி, இரண்டாவது வாசலை கடந்து இடதுபுறமாக திரும்பினால் உள் சுற்றில் சந்திரனும், திருநாவுக்கரசர் உற்சவ மூர்த்தியும், மூல மூர்த்தமும் தனித்தனி சன்னிதிகளாக உள்ளன. திருநாவுக்கரசரை உட்கார்ந்த நிலையில் இந்தக் கோவிலில் மட்டுமே காண முடியும். உட்பிரகாரம் சுற்றி வரும்போது 63 நாயன்மார்கள் சன்னிதியை தரிசிக்கலாம்.

தல விநாயகராக கன்னி விநாயகர் அருள்பாலிக்கிறார். அம்பிகை இறைவனை வழிபட்டபோது உதவி செய்தமையால் கையில் பாதிரி மலருடன் இந்த விநாயகர் காட்சி தருகிறார். உள் சுற்றில் உற்சவ திருமேனிகளின் சன்னிதி, வியாக்ரபாதர், அகத்தியர் முதலியோர் பூஜித்த லிங்கங்கள், மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னிதி, வள்ளி-தெய்வானை சமேத ஆறுமுகர் சன்னிதி போன்றவை இருக்கின்றன. துவாரபாலகரைத் தொழுது உள்ளே சென்றால் பாடலீஸ்வரரை தரிசிக்கலாம். இங்கு சிவன், சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார்.

பாடலீஸ்வரரை விரதமிருந்து மனமுருகி வேண்டினால், நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. உடல் சம்பந்தப்பட்ட நோய்கள் தீருவதோடு, மனநிம்மதியும் கிடைக்கும். குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பெரியநாயகி அம்மன் தவம் செய்து, தன் மணாளனின் கரம் பற்றிய தலம் என்பதால், பிரிந்த தம்பதியினர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலுக்கு வந்து வழிபட்டால் கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது. வெள்ளிக்கிழமை சிவகர தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கினால் நினைத்தது கைகூடும். ஆனால் தற்போது சிவகர தீர்த்த குளம் நீராட வசதியின்றி காணப்படுகிறது. செவ்வாய்க்கிழமைகளில் 108 தாமரை மலர் கொண்டு, 108 திருவிளக்கு ஏந்தி அம்பிகையை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்பதும் இன்றளவும் பக்தர்களால் நம்பப்படுகிறது. இதனால் பாவங்கள் நீங்கும் புண்ணிய தலமாக விளங்குகிறது.

இந்த ஆலயத்தில் சித்திரையில் இளவேனில் வசந்த விழா (அப்பருக்கு 10 நாட்கள் விழா), வைகாசி மாதம் விசாகப் பெருவிழா, ஆனி மாதம் மாணிக்கவாசகருக்கு 10 நாட்கள் விழா, ஆடியில் அம்பிகைக்கு ஆடிப்பூர விழா (10 நாட்கள்), புரட்டாசியில் நவராத்திரி விழா, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கார்த்திகையில் சோமவார வழிபாடுகள், மார்கழியில் தனுர் மாத விழா மற்றும் திருவாதிரைப் பெருவிழா, தை மாதம் பெண்ணையாற்றில் தீர்த்தவாரி, தை அமாவாசையில் கடல் தீர்த்தவாரி, மாசி மாதம் மாசி மக தீர்த்தவாரி ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

பள்ளியறைக்கு எழுந்தருளும் அம்மன்

பொதுவாக சிவன் கோவில்களில் பள்ளியறையானது, அம்மன் சன்னிதியை ஒட்டியே அமைய பெற்றிருக்கும். அர்த்தஜாம பூஜை முடிந்ததும் பள்ளியறைக்கு ஈசன் தான் எழுந்தருள்வார். ஆனால் இந்தக்கோவிலில் சுவாமி சன்னிதியை ஒட்டி பள்ளியறை அமைந்துள்ளது. இதனால் தினமும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்கிறார். இந்த நிகழ்வு வேறு எந்த கோவில்களிலும் காணக் கிடைக்காத தனிச்சிறப்பாகும். இக்கோவிலில் சிவனுக்கே மதிப்பு அதிகம். ஆயிரம் கலைகளோடு கூடிய சந்திரனை, தன் தலையில் சூடி ஈசன் அருள்பாலிக்கும் இடம் இந்தக் கோவில். எனவேதான் அம்பாள் இங்கு வந்து தவம் செய்தார். அன்னையே பள்ளியறைக்கும் எழுந்தருள்கிறார்.

ஆற்றை திருப்பி விட்ட ஈசன்

திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரரை தரிசிக்க மாணிக்கவாசகர் வந்தார். அப்போது கெடிலம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எனவே அவரால் பாடலீஸ்வரரை தரிசிக்க முடியவில்லை. இருப்பினும் எப்படியும் இறைவனை தரிசிக்க வேண்டும் என்று, அங்கேயே 3 நாட்கள் காத்திருந்தார். ஆனாலும் வெள்ளம் வடியவில்லை. இதனால் தன் நிலையைக்கூறி சிவபெருமானை நோக்கி மாணிக்கவாசகர் வழிபட்டார். அப்போது சித்தராகத் தோன்றிய சிவன், மாணிக்கவாசகரை நீர்மேல் நடந்து வருமாறு பணித்தார். ஆனால் பயத்தால் மாணிக்கவாசகர் அப்படியே நின்றார். உடனே சிவன், மாணிக்கவாசகரை கண்களை மூடும்படி கூறிவிட்டு, பிரம்பு ஒன்றை ஏவி பாடலி வனம் நோக்கி வராமல், அந்த ஆற்றை திசை திருப்பி ஓடச்செய்தார். கண் விழித்த மாணிக்கவாசகர், இறைவனின் கருணையை நினைத்தபடியே திருத்தலம் வந்து இறைவனை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.

மேலும் செய்திகள்