ஈரோடு
சொக்கநாதபாளையம் சுயம்பு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
|சொக்கநாதபாளையம் சுயம்பு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது.
சென்னிமலை
சென்னிமலை அருகே சொக்கநாதபாளையத்தில் பழமையான சுயம்பு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்தது.
இதைத்தொடர்ந்து கும்பாபிஷேக விழா நேற்று அதிகாலை 4 மணிக்கு விநாயகர் வழிபாடு, கோமாதா பூஜையுடன் தொடங்கியது. பின்னர் 7 மணிக்கு மகா கணபதி ஹோமம், மகா லட்சுமி ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்கள் திருமூர்த்திமலை, பழமுதிர்சோலை, மடவிளாகம் மற்றும் கர்நாடக மாநிலம் தலைக்காவிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து காங்கேயத்தை அடுத்த மறவபாளையம் மாகாளியம்மன் கோவிலில் இருந்து யானை, குதிரைகளுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். மேலும் இந்த ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் முளைப்பாரியும் எடுத்து வந்தனர். இதையடுத்து மாலை 5 மணிக்கு முதல் கால யாக பூஜை நடந்தது.
இன்று (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, கோபுர கலசங்களுக்கு அபிஷேகம், கோபுரம் மற்றும் குறிஞ்சி கலசங்கள் வைத்தல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால யாக பூஜை நடக்கிறது. காலை 6 மணிக்கு கோபுரம், குறிஞ்சி, விநாயகர், சுயம்பு மாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு மகா அபிஷேகம், தசதானம், தச தரிசனம், மகா தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவிலை சேர்ந்த 7 கிராமத்து பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறாா்கள்.