< Back
ஆன்மிகம்
சித்ரா பவுர்ணமி கிரிவலம்
ஆன்மிகம்

சித்ரா பவுர்ணமி கிரிவலம்

தினத்தந்தி
|
4 May 2023 6:11 PM IST

திருவண்ணாமலை கிரிவலம் மிகவும் பிரசித்திப் பெற்றது. மாதம் தோறும் பவுர்ணமி நாளில், இறைவனே மலையாக இருக்கும் திருவண்ணாமலை மலையை அனைவரும் வலம் வந்து வணங்குவார்கள்.

மற்ற பவுர்ணமி தினங்களைவிட, சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியின் போது, பூமியின் இறை சக்தியின் ஆற்றல் அதிகம் பரவுவதாக ஆன்மிகம் பறைசாற்றுகிறது. மேலும் ஆன்மிக பூமியான திருவண்ணாமலையில், சித்ரா பவுர்ணமி அன்று அருவமாக இருக்கும் சித்தர்கள் பலரும் சித்ரா பவுர்ணமியின் சூட்சும வடிவங்களில் மக்களோடு மக்களாக கிரிவலம் வருவதாகவும் சொல்லப்படுகிறது.

எனவே சித்ரா பவுர்ணமி அன்று சிவ சிந்தனையோடு, மனதில் எந்த விருப்பு வெறுப்பும் இன்றி கிரிவலம் வரும் பக்தர்களுக்கு, சிவனின் அருளோடு, சித்தர்களின் பரிபூரண அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். சித்ரா பவுர்ணமி அன்று சித்தர்கள் வெளியில் வருவதால், சித்தர்களின் ஜீவ சமாதியில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அன்று சித்தர்கள் சமாதிக்கு சென்று மனதை ஒருமுகப்படுத்தி சித்தர்களை மட்டுமே மனதில் நிறுத்தி தியானம் செய்தால், ஏதோ ஒரு வடிவில் சித்தர்கள் நமக்கு காட்சி கொடுத்து அருளாசி புரிவார்கள் என்பது நம்பிக்கை. இந்த தினத்தில் கிரிவலம் செல்வதோடு, கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதும் இறைவனின் அருளைப் பெற்றுத் தரும்.சிவ பக்தியில் மூழ்கி கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினால், நாம் கேட்டதை இறைவன் வழங்குவார். நமது எண்ணங்கள் ஈடேற சித்தர்கள் துணை நிற்பர்.

ஏதாவது ஒரு காரணத்தால் சிலருக்கு, கிரிவலம் செல்ல இயலாமல் போகலாம். அது போன்ற சூழ்நிலையில் சித்ரா பவுர்ணமி அன்று விரதம் இருந்து சித்ரகுப்தனையும், சிவனையும் போற்றும் மந்திரங்களை ஜெபிக்கலாம். நம்மால் முடிந்த அளவு பசியால் வாடும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கலாம். ஏழ்மை சூழ்நிலையில் படிக்கும் பிள்ளைகளுக்கு பேனா, நோட்டு புத்தகங்கள் வாங்கி தரலாம். காலை முதல் மாலை வரை விரதம் மேற்கொண்டு, இரவில் முழு நிலவைப் பார்த்ததும், உணவு உட்கொள்ளலாம்.

மேலும் செய்திகள்