சிதம்பரம் ஆனித் திருமஞ்சன விழா: தங்க கைலாய பர்வத வாகனத்தில் இன்று சுவாமி வீதியுலா
|கைலாய பர்வதத்தை நேரில் சென்று தரிசனம் செய்ய இயலாதவர்களுக்காக, சுவாமியை கைலாய பர்வத வாகனத்தில் எழுந்தருளச் செய்து தரிசிக்க முக்தி கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்காகும்.
சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சனமும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் காலை, மாலை வேளையில் வெவ்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெற்று வருகிறது.
விழாவின் 5-ம் நாளான நேற்று முன்தினம் தெருவடைச்சான் உற்சவம் நடந்தது. இரவு 11 மணிக்கு கீழவீதியில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெருவடைச்சான் சப்பரத்தில் சோமாஸ்கந்தர், சிவானந்தநாயகி, சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இதையடுத்து அங்கிருந்த திரளான பக்தர்கள் சப்பரத்தை 4 வீதிகள் வழியாகவும் இழுத்து சென்றனர். தெருவடைச்சான் சப்பரம் 4 வீதிகள் வழியாக வீதிஉலா சென்று நேற்று அதிகாலை 3 மணிக்கு மீண்டும் கீழவீதியை அடைந்தது. 6-ம் நாள் திருவிழாவில், சிறப்பு யாகசாலை பூர்ணாஹூதி நடைபெற்றது. இரவில் வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் 7-ம் நாளான இன்று இரவு கைலாய பர்வத காட்சி நடைபெறுகிறது. தங்க கைலாய பர்வத வாகனத்தில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
நம்முடைய ஜீவாத்மாவானது பரமாத்மாவுடன் ஐக்கியமாகி நாம் சர்வசதாகாலமும் சுவாமியிடம் சரணாகதி அடைந்து முக்தியடையும் பொருட்டு, சுவாமி வாசம் செய்யக்கூடியதாய் விளங்குகின்ற கைலாய பர்வதத்தை நேரில் சென்று தரிசனம் செய்ய இயலாதவர்களுக்காக, சுவாமியை கைலாய பர்வத வாகனத்தில் எழுந்தருளச் செய்து தரிசிக்க முக்தி கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்காகும்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை மறுநாள் (11-ந்தேதி) தேரோட்டமும், 12-ந்தேதி மதியம் 2 மணிக்கு ஆனி திருமஞ்சன மகா தரிசனமும் நடைபெற உள்ளது.