< Back
ஆன்மிகம்
காரியங்களை நிறைவேற்றும் காளிகாம்பாள்
ஆன்மிகம்

காரியங்களை நிறைவேற்றும் காளிகாம்பாள்

தினத்தந்தி
|
21 March 2023 8:09 PM IST

சென்னை பாரிமுனை தம்புச் செட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோவில் மிகவும் பழமையானது ஆகும். இந்த ஆலயத்தின் சிறப்புகளைப் பற்றி இங்கே சிறிய குறிப்பாக பார்க்கலாம்.

* ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால், இத்தலத்தில் நீங்கள் செய்யும் எல்லா வேண்டுதல்களும் குறைவின்றி வெற்றி பெறும்.

* தற்போது அமைந்த ஆலயம் 1639-ம் ஆண்டு விஸ்வகர்மா குலத்தவரால் கட்டப்பட்டிருக்கிறது.

* காளிகாம்பாள் ஆலயம் கிழக்கு நோக்கி உள்ளது. அம்பாள் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறாள்.

* சிதம்பரத்தில் வழிபட்டால், திருவண்ணாமலையை நினைத்தால், காளையார் கோவிலில் காலடி எடுத்து வைத்தால், திருவாரூரில் பிறந்தால் மோட்சம் கிடைக்கும் என்பார்கள். அது போல காளிகாம்பாள் தலத்தில் குங்குமம் பிரசாதம் பெற்றாலே வாழ்வில் உயர்வும், மோட்சமும் கிடைக்கும்.

* காளிகாம்பாள் தேவியானவள், மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக பெற்றிருப்பதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* காளிகாம்பாள் ஆலயத்தின் பரிவார தேவதை கடல் கன்னி ஆகும்.

* காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம், தும்பட்டம், வீண் பெருமை, தன்நிலை உணராமை போன்றவற்றை காளிகாம்பாளை வழிபட, நம் மனதில் இருந்து நீங்கச் செய்யலாம்.

* இத்தலத்தில் இந்திரன், குபேரன், விஸ்வகர்மா ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

* நாகலோக கன்னிகளும், தேவலோக கன்னிகளும் அன்னை காளிகாம்பாளை வழிபட்டு, பூர்வ ஜென்ம பலனை அடைந்துள்ளனர்.

* இத்தலத்தில் பவுர்ணமி தோறும் இரவு 7 மணிக்கு அம் பாளுக்கும், ஸ்ரீ காயத்ரி தேவிக்கும் கூட்டு வழிபாடும், பூஜையும் நடைபெறும்.

* ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5 மணிக்கும், ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கும் சிறுவர்களுக்கான நீதி போதனை மற்றம் ஆன்மிக வகுப்பு இலவசமாக நடத்தப்படுகிறது.

* வெள்ளிக்கிழமை தோறும் கன்னி பூஜை, கோ பூஜை, திருவிளக்கு பூஜை நடக்கிறது.

* இத்தலத்தில் நடைபெறும் 'சுவாசினி பூஜை' சிறப்பு மிக்கது. இந்த பூஜை சுமங்கலிகளுக்கு விசேஷ அருள் தருவதாகும். இதற்காகவே சென்னையில் 'சுவாசினி சங்கம்' ஏற்படுத்தப்பட்டுள்ளது.

* அமாவாசை தோறும் இத்தலத்தில் ஸ்ரீகாயத்ரி தேவிக்கும், விஸ்வ பிரம்மத்துக்கும் விஸ்வகர்ம வழிபாட்டுக் குழு சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

* இத்தலம் இரு பிரகாரங்களைக் கொண்டது. உள் பிரகாரத்தில் அருணாசலேஸ்வரர், நவக்கிரகங்கள், வள்ளி-தெய்வானை சமேத முருகர், வீரபகாமங்கர், அவருடைய சீடர் சித்தையா, கமடேஸ்வரர், துர்க்கை, சண்டிமகேஸ்வரர், பைரவர், பிரம்மா, சூரிய-சந்திரர்கள் உள்ளனர். வெளிப்பிரகாரத்தில் சித்தி விநாயகர், கொடி மரம், வடகதிர்காம முருகன், சித்தி புத்தி விநாயகர், காயத்ரி, துர்க்கை தேவி, யாகசாலை, நடராசர், மகாமேரு, வீரபத்திர மகா காளியம்மன், நாகேந்திரர், விஸ்வ பிரம்மா சன்னிதிகள் அமைந்துள்ளன.

* திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள், காளிகாம்பாள் கருவறையில் உள்ள மூலவருக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து, அந்த மஞ்சளை பயன் படுத்தி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

* செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில், எலுமிச்சை பழம் தீபம் ஏற்றி வழிபடுவது கூடுதல் நன்மை தரும்.

* இத்தலத்தில் உள்ள மேற்கு நோக்கிய நிலையில் உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

மேலும் செய்திகள்