திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தேரோட்டம்
|விழாவில் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தை பிரம்மோற்சவ விழா கடந்த 4 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினசரி காலையும், மாலையும் சாமி வீதி உலா நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடைபெற்றது.
திருதேரில் காலை 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் வீரராகவர் பெருமாள் எழுந்தருளினார். பின்னர் தேர் நான்கு மாட வீதிகள் வழியாக வந்து மீண்டும் தேரடியை வந்தடைந்தது.
இந்த விழாவில் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்ன பக்தி பரவசத்துடன் உப்பு, மிளகு ஆகியவற்றை தேர் சக்கரத்தின் மீது கொட்டி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.