< Back
ஆன்மிகம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: ஓம் சக்தி.. பராசக்தி என கோஷம்
ஆன்மிகம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: ஓம் சக்தி.. பராசக்தி என கோஷம்

தினத்தந்தி
|
16 April 2024 11:48 AM IST

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

திருச்சி,

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்கோவில். இந்த அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம்பெருகும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும். இதன் காரணமாக இக்கோவிலுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

இத்தகைய சிறப்புமிக்க இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கிலும், இரவு சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், மரக்குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து அம்மன் தேருக்கு அழைத்துவரப்பட்டார். தொடர்ந்து காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் அம்மன் தேரில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கைகள் ஒலிக்க அலங்கரிக்கப்பட்ட யானை முன்னே செல்ல பக்தர்கள் ஓம்சக்தி.. பராசக்தி.. என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

தேரோட்ட நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும் வழிபட்டு வருகின்றனர். தேரோட்டத்தையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்