சென்னை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்
|நரசிம்ம பிரம்மோற்சவத்தையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்ம பிரம்மோற்சவத்தின் பிரதான நாளான இன்று காலை தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இந்த கோவிலில் யோக நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
இந்த ஆண்டிற்கான நரசிம்ம பிரம்மோற்சவம், கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 3-ம் நாள் கருடசேவை உற்சவம் விமர்சையாகவும் 5-ம் நாள் விழாவில் பல்லக்கு நாச்சியார் திருக்கோலம் புறப்பாடும், அதைத் தொடர்ந்து யோக நரசிம்மர் திருக்கோலத்தில் உற்சவர் புறப்பாடும், இரவு அனுமந்த வாகன புறப்பாடும், விழாவின் 6-ம் நாள் திருவிழாவில் சூர்ணாபிஷேகம் நடந்தது.
அதைத்தொடர்ந்து தங்கச்சப்பர பறப்பாடும், ஏகாந்தசேவையும், இரவு யானை வாகன புறப்பாடு நடந்தது. தொடர்ந்து இன்று நடந்த தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். விழா ஏற்பாடுகளை துணை கமிஷனர் பி.கே.கவெனிதா உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.