< Back
ஆன்மிகம்
Char Dham Yatra devotees visit Kedarnath

Image Courtesy : ANI

ஆன்மிகம்

'சார் தாம்' யாத்திரை: கேதர்நாத் கோவிலுக்கு இதுவரை 7 லட்சம் பக்தர்கள் வருகை

தினத்தந்தி
|
7 Jun 2024 9:59 PM IST

'சார் தாம்' யாத்திரை தொடங்கிய பிறகு கேதர்நாத் கோவிலுக்கு இதுவரை சுமார் 7 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

டேராடூன்,

இந்துக்களின் நான்கு புனித தளங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்குச் செல்லும் யாத்திரையானது 'சார் தாம்' யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான 'சார் தாம்' யாத்திரைப் பயணம் கடந்த மே மாதம் 10-ந்தேதி தொடங்கியது.

ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசிக்க முடியும். குளிர்காலங்களில் குகைக்கோவில்கள் மூடப்பட்டு விடும். மேலும் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும்.

இந்த ஆண்டு யாத்திரை தொடங்கிய முதல் நாளில் கேதர்நாத் கோவிலில் சுமார் 29 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்தது. தொடர்ந்து நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'சார் தாம்' புனித யாத்திரை மேற்கொள்வதற்காக உத்தரகாண்ட் மாநிலத்திற்கு வருகை தருகின்றனர்.

இந்நிலையில் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான கேதர்நாத் கோவிலுக்கு கடந்த மே 10-ந்தேதி முதல் இதுவரை 7 லட்சத்து 10 ஆயிரத்து 698 பக்தர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் யாத்திரை பாதைகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். 'சார் தாம்' யாத்திரை செல்வதற்கு கட்டாயமாக முன்பதிவு செய்திருக்க வேண்டும் என உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்