காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா
|காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவத்துக்கான கொடியேற்ற விழா இன்று நடந்தது.
காஞ்சிபுரம்,
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் வைகாசி மாத பிரம்மோற்சவத்துக்கான கொடியேற்ற விழா இன்று நடந்தது. வைகாசி பிரம்மோற்சவத்தை ஒட்டி அத்திகிரி மலையில் இருந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் இறங்கி வந்த ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து,சிறப்பு அலங்காரத்தில் தங்க கொடி மரத்தருகே உள்ள தேசிகர் சன்னதி மண்டபத்தில் எழுந்தருள செய்தனர்.
பின்னர் கருடாழ்வார் சின்னம் பொறித்த கொடி பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கோவில் பட்டாச்சாரியார்கள் கருடாழ்வார் கொடியினை தங்க கொடி மரத்தில் ஏற்றி வைத்து வைகாசி பிரம்மோற்சவத்தை தொடங்கி வைத்தனர்.
வைகாசி பிரம்மோற்சவத்தை ஒட்டி இன்று முதல் நாள் காலை,தங்க சப்பர வாகனத்தில்ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ வரதராஜ பெருமாள் நகரின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதிகாலையில் தங்க சப்பர வாகனத்தில் வீதி உலா வந்த வரதராஜ பெருமாளை அகோபில மட ஜீயர் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.