< Back
ஆன்மிகம்
ஆன்மீகம்: கடவுளுக்குக் கெடு விதிக்கலாமா?
ஆன்மிகம்

ஆன்மீகம்: கடவுளுக்குக் கெடு விதிக்கலாமா?

தினத்தந்தி
|
18 July 2023 5:46 PM IST

கடவுளுக்குக் கெடு விதிப்பதும், கடவுள் இந்த நாளுக்குள் இதைச் செய்யாவிட்டால்... என நிபந்தனைகள் விதிப்பதும் எவ்வளவு முட்டாள்தனமான வாதங்கள் என்பதையே இந்த வசனங்கள் விளக்குகின்றன.

மன்னர் நெபுகத்நேசரின் வலிமைமிகு படைத்தலைவன் ஓலோபெரின். அவன் யூதாவை முற்றுகையிடுகிறான். இதற்கு முன் சென்ற நாடுகளையெல்லாம் அழித்து, ஒழித்து, கபளீகரம் செய்தவன். யாராலும் வெல்ல முடியாத வீரன். அவன் பெயரைக் கேட்டாலே நாடுகளும், அரசுகளும் அலறும். இப்போது பல லட்சம் வீரர்களுடன் யூதாவை நெருங்கியிருக்கிறான்.

யூதா மக்கள் இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். எதிரிகள் முற்றுகையிட்டிருப்பதை அறிந்ததும் அவர்கள் யோசிக்கின்றனர். எதிரிகள் நாட்டினுள் நுழையா வண்ணம் வழிகளை எல்லாம் அடைத்துவிட்டு நாட்டுக்குள் பாதுகாப்பாய் இருக்கின்றனர். எதிரியோ சூழ்ச்சியாய் யோசிக்கிறான். நாட்டுக்குள் வரும் தண்ணீர் வழிகளை அடைத்துவிட்டு மக்களை அழிக்க முயல்கிறான். நாட்டில் தண்ணீருக்குத் தட்டுப்பாடு வருகிறது. மக்கள் தத்தளிக்கிறார்கள். ஊர் தலைவர்கள், "இன்னும் ஐந்து நாட்கள் பொறுத்திருப்போம், கடவுள் நம்மை மீட்காவிட்டால் எதிரிகளிடம் சரணடைவோம்" எனும் முடிவை எடுக்கின்றனர்.

தலைமைக்குரு இல்க்கியாவின் வழித்தோன்றலான யூதித்து எனும் பெண்மணி இதைக் கேட்டு மனம் வருந்துகிறார். அவர் மக்களை நோக்கி, "மனித உள்ளத்தின் ஆழத்தையே நீங்கள் காண முடியாது; மனித மனம் நினைப்பதையே நீங்கள் உணர முடியாது. அவ்வாறிருக்க, இவற்றையெல்லாம் படைத்த கடவுளை எவ்வாறு உங்களால் தேடி அறிய முடியும்? அவருடைய எண்ணத்தை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? அவருடைய திட்டத்தை எவ்வாறு தெரிந்துகொள்ள முடியும்?" என்கிறார். கடைசியில் கடவுள் அவர் மூலமாகவே எதிரிகளை அழித்து, நாட்டைக் காப்பாற்றுகிறார்.

கடவுளுக்குக் கெடு விதிப்பதும், கடவுள் இந்த நாளுக்குள் இதைச் செய்யாவிட்டால்... என நிபந்தனைகள் விதிப்பதும் எவ்வளவு முட்டாள்தனமான வாதங்கள் என்பதையே இந்த வசனங்கள் விளக்குகின்றன.

இறைவனின் திட்டங்கள் ெதாடக்கத்துக்கும் முன்பே நிர்ணயிக்கப்பட்டு, முடிவுக்குப் பின்பும் தொடரப் போகின்றவை. "நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாய் வாழ்கிறோம்" என்பதால் கடவுள் நாம் குறிப்பிடும் நேரத்தில் பதிலளிக்க வேண்டுமென்பதில்லை.

சுருக்கமாகச் சொல்லவேண்டு மெனில், நமது செயல்களோ, நமது தேவைகளோ, நமது அவசரங்களோ இறைவனின் காலத்தை நிர்ணயிப்பதில்லை. அவர் நம்மீது கொண்டிருக்கும் அன்பு ஒன்றே அதை நிர்ணயிக்கிறது. "நாம் வேண்டுவதற்கும் முன்பாகவே நமது தேவையை அறிந்தவர் அவர்" என்கிறது விவிலியம்.

'உனக்கு ஒரு குழந்தையைக் கொடுப்பேன்' என ஆபிரகாமுக்குக் கடவுள் வாக்குறுதி அளிக்கிறார். ஆனால் உடனே அதைக் கொடுக்கவில்லை. ஆபிரகாமும் அடுத்த பத்து மாதங்களில் அதிசயம் நடக்கவில்லையென கலங்கவில்லை. கால் நூற்றாண்டு காலம் காத்திருக்கிறார். கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாய்ச் செய்து முடிக்கிறார். அதைப் புரிந்து கொள்ளாமல் நாம் நமது அட்டவணைக்குள் அவரை அடக்கப் பார்க்கிறோம்.

"எவ்ளோ நாளா கேக்கறேன், கடவுளுக்குக் காதில்லையா? எவ்ளோ நாள் நோன்பு இருந்து செபிக்கிறேன், கடவுள் பதில் தரலையே. நான் எவ்ளோ கேட்டும் கடவுள் தரல, அதனால கோயிலுக்கு போறதையே விட்டுட்டேன்". இப்படியெல்லாம் சிலர் உளறுவதை நாம் கேட்டிருப்போம். இறைவன் நம் கட்டளைகளுக்குக் கட்டுப்படும் மனிதரா?, இல்லை நாம் அவரது கட்டளைகளின் படி வாழவேண்டிய மனிதரா?, அவர் நமக்கு வழிகாட்டுபவரா, இல்லை நாம் அவருக்கு வழிகாட்டுபவர்களா?

நாம் செய்யவேண்டியதெல்லாம், "அமைதி கொண்டு நானே தேவன் என அறிந்து கொள்ளுங்கள்" எனும் இறை வசனத்தை நம்புவது மட்டுமே. விசுவாசம் என்பது காண்பவற்றை நம்புவதல்ல, காணாதவற்றை நம்புவது. 'கடவுள் இன்றைக்குத் தராவிட்டாலும், என்றைக்காவது தருவார்' என நம்புவதே விசுவாசம். அவர் தராத விஷயங்கள் நமது நன்மைக்கானவை என்பதை நம்புவதே ஆழமான விசுவாசம்.

பாலை நிலத்தில் இஸ்ரயேல் மக்கள் நடந்து கொண்டிருந்தபோது எதையும் அவர்களாகத் திட்டமிடவில்லை. இறைவனே வழிகாட்டினார். கூடாரத்தின் மேலேயிருந்து மேகம் எழும்பிச் சென்றபோது இஸ்ரயேல் மக்கள் புறப்படுவர்; மேகம் தங்கி இருந்த இடத்தில் இஸ்ரயேல் மக்கள் பாளையம் இறங்குவர். ஆண்டவர் கட்டளைப்படியே இஸ்ரயேல் மக்கள் புறப்பட்டனர்; ஆண்டவர் கட்டளைப்படியே அவர்கள் பாளையம் இறங்கினர்; மேகம் திருஉறைவிடத்தின்மேல் தங்கி இருந்த நாளெல்லாம் அவர்களும் பாளையத்தில் தங்கியிருந்தனர். மேகம் திருஉறைவிடத்தின்மேல் பல நாள்கள் தொடர்ந்திருந்தபோது கூட இஸ்ரயேல் மக்கள் ஆண்டவர் வார்த்தையைக் கடைப்பிடித்தனர்; அவர்கள் புறப்படவில்லை. மேகம் நடந்தபோது கூடாரங்களைப் பிரித்துக் கொண்டு மக்கள் நடந்தார்கள். 'கடவுளே நேற்று தான் கூடாரத்தை எல்லாம் போட்டோம், இன்னிக்கு மறுபடியும் கிளம்ப சொல்றீங்களே' என சொல்லவில்லை.

'இறைவனின் வழிகளில் நடப்போம், அவருடைய நேரத்துக்காய் காத்திருப்போம். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காலம் உண்டு' என்கிறது விவிலியம். 'விதைக்க ஒரு காலம், அறுக்க ஒரு காலம்' என்கிறது பைபிள்.

காலங்களை உருவாக்கியவரும், காலங்களுக்கு முன்பே உருவானவரும் அவரே!

அவருக்காய் காத்திருப்போம், வாழ்க்கை அர்த்தப்படும்.

மேலும் செய்திகள்