< Back
ஆன்மிகம்
விவிலியம்: தாராளமாக மன்னியுங்கள்
ஆன்மிகம்

விவிலியம்: தாராளமாக மன்னியுங்கள்

தினத்தந்தி
|
27 Sept 2022 2:59 PM IST

அறிந்தோ அறியாமலோ தவறு செய்பவர்களை நாம் மன்னிக்க மறுக்கிறோம். மன்னிப்பதால் மன உளைச்சல், கவலை, சோர்வு போன்றவை நம்மை விட்டு நீங்கிவிடும் என்று விவிலியம் சொல்கிறது.

நம்முடைய மனைவியோ, கணவனோ, பிள்ளைகளோ, உறவினர்களோ, நண்பர்களோ... நமக்கு சம்பந்தப்பட்டவர்கள் சிறு தவறு செய்தால்கூட அதை ஊதிப் பெரிதாக்கும் மனோபாவம் நம்மில் பலருக்கு உண்டு.

அவர்களைக் குற்றவாளிகளைப் போல் நடத்த விரும்பும் நாம், அவர்களைப் பற்றி மற்றவர்களிடம் கூறும்போது "அவனைப் போல் இருக்காதே.. அவளைப் போல் இருக்காதே!" என்று தவறான முன்மாதிரிகளைப் போல் அவர்களை உடனடியாகத் தீர்ப்பிட்டு விடுகிறோம்.

சிறு தவறுகளுக்கே நாம் மற்றவர்களை இப்படி நடத்துகிறோம் என்றால் தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ தவறு செய்பவர்களை நாம் மன்னிக்க மறுக்கிறோம். அவர்கள் எத்தகைய மன நிலையில் சூழ்நிலையில் தவறுகளை இழைத்தார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்ப்பதே இல்லை. இதனால் தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்த அவர்களுக்கு நாம் வாய்ப்புத் தருவதே இல்லை.

மன்னிப்பதால் மன உளைச்சல், கவலை, சோர்வு போன்றவை நம்மை விட்டு நீங்கிவிடும் என்று விவிலியம் சொல்கிறது. இது அறிவியல்பூர்வமான உண்மையும்கூட. "ஒருவருக்கொருவர் கருணையும் கரி சனையும் காட்டுங்கள்; கிறிஸ்துவின் மூலம் கடவுள் உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல், நீங்களும் ஒருவரையொருவர் தாராளமாக மன்னியுங்கள்" என எபேசியர் (4:32) எடுத்துக் கூறுகிறது.

"நாம் செய்யும் எல்லாத் தவறுகளையும் கடவுள் கணக்கு வைத்திருந்தால் நம் கதி என்னவாகியிருக்கும்" (சங்கீதம் 130:3)! "மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை" என்ற பைபிளின் நீதிமொழியையும் (19:11) மனதில் நிறுத்துங்கள்.

மற்றவர்களை மன்னிப்பதில் உங்களுக்குத் தயக்கம் இருக்கிறதா? அப்படியானால் மன்னிக்கப்பட வேண்டியவரை உங்கள் உடன்பிறந்த சகோதரரைப் போல எண்ணிக்கொள்ளுங்கள்.

"உங்கள் சகோதரர் ஒரு பாவம் செய்தால், அவரிடம் தனியாகப் போய் அவருடைய தவறை எடுத்துச் சொல்லுங்கள்; அவர் உங்களுக்குச் செவிகொடுத்தால், உங்கள் சகோதரரை நல்வழிக்குக் கொண்டுவந்திருப்பீர்கள்" என்று மத்தேயு (18:15) எடுத்துச் சொல்வதைப் பாருங்கள்.

நான் நல்லவன் என்பதை எல்லார் முன்னிலையிலும் காட்ட வேண்டும் என்பதைவிட, சமாதானம் ஆக வேண்டும் என்பதே உங்கள் குறிக்கோளாக இருக்கட்டும். என் மனதைக் காயப்படுத்திவிட்டீர்கள் என்று சொல்லாமல், 'இப்படிச் சொன்னது என் மனதுக்குக் கஷ்டமாக இருந்தது' என்று சொல்லுங்கள்.

"யாருக்கும் தீமைக்குத் தீமை செய்யாதீர்கள்; உங்கள் எதிரி பசியாக இருந்தால், அவனுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்; அவன் தாகமாயிருந்தால், அவனுக்கு ஏதாவது குடிக்கக் கொடுங்கள்" என்று ரோமர்(12:17) வழிகாட்டுகிறது.

ஏனெனில் நம்மைப் படைத்த கடவுளான பரலோகத் தந்தையை `சமாதானத்தின் கடவுள்' என்று விவிலியம் சொல்கிறது. பூமியிலுள்ள தம் பிள்ளைகள் சமாதானமாக வாழ வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். ``ஒருவர்மீது ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால், ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னியுங்கள். பரலோகத் தந்தை உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல் நீங்களும் ஒருவரையொருவர் மன்னியுங்கள்" என்று கொலோசெயர் (3:13) புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.

பொறுமையாக இருங்கள். எல்லாருடைய சுபாவமும் மனப்பக்குவமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலருடைய கோபம் தணிய நாட்கள், மாதங்கள், ஏன் சில வருடங்கள் கூட எடுக்கலாம். அவர்களிடம் மாற்றத்தைக் கடவுள் கண்டிப்பாக விதைப்பார். இந்தத் தருணத்துக்காகத்தானே காத்திருந்தீர்கள். "தீமை உங்களை வெல்லும்படி விடாமல், தீமையை எப்போதும் நன்மையால் வெல்லுங்கள்" என்று (ரோமர் 12:21) விவிலியம் வழிகாட்டுகிறது.

மேலும் செய்திகள்