< Back
ஆன்மிகம்
போஜேஸ்வரர் கோவில்: முடிவடையாத நிலையில் அழகான ஆலயம்
ஆன்மிகம்

போஜேஸ்வரர் கோவில்: முடிவடையாத நிலையில் அழகான ஆலயம்

தினத்தந்தி
|
24 Feb 2023 5:39 PM IST

மத்திய பிரதேசத்தில் உள்ள போஜ்பூர் கிராமத்தில் அமைந்திருக்கிறது, போஜேஸ்வரர் கோவில். 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த ஆலயம், முழுமையாக கட்டி முடிக்கப்படாத நிலையில் இருக்கிறது.

சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயத்தில், மிகப்பெரிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 11-ம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆட்சி செய்த பரமார மன்னன் போஜா என்பவரின் காலத்தில் இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுள்ளன. பின்னர் சில காரணங்களால் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தினை சுற்றியுள்ள பாறைகளில், ஆலயத்தின் கட்டிடக்கலைக்கான திட்டங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆலயம் இருக்கும் இடத்தின் அருகில் ஆலய கட்டுமானத்திற்கான பொருட்கள், பாறைகளில் செதுக்கப்பட்ட ஆலய கட்டிடத்தின் வரைபடங்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதனை வைத்துதான், இது 11-ம் நூற்றாண்டு ஆலயம் என்பதும், இதனை போஜா என்ற மன்னன் கட்டியெழுப்பியிருக்கிறான் என்பதும் ஆய்வாளர்களால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில், முக்கிய தேசிய சின்னமாக பாதுகாக்கப்பட்டு வரும் இந்த ஆலயம், வித்தியாசமான முறையில் கட்டியெழுப்பப்பட்டு உள்ளது. கோவில் கர்ப்பக்கிரகத்துடன் இணைக்கப்பட்ட முன் மண்டபம், வழக்கமான குவிமாட கோபுரத்திற்கு பதிலாக நேர்கோட்டு கூரை என்று மன்னன் வித்தியாசமான ஒரு ஆலயத்தை எழுப்ப முயன்றுள்ளான். கோவிலின் வெளிப்புறம் சுற்றுச்சுவர்கள் இன்றி காணப்படு கிறது. நுழைவு வாசல் சுவரில் சில சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோவிலானது, 115 அடி நீளம், 82 அடி அகலம் மற்றும் 13 அடி உயரம் கொண்ட மேடையில் அமைந்துள்ளது. கருவறையின் வாசல் 33 அடி (10 மீ) உயரம் கொண்டது. ஆலயத்தின் கருவறை முன்பாக உள்ள திறந்தவெளியில் நந்திசிலை, நாகர் பீடம், அம்மன் சன்னிதி, நதி தெய்வங்கள், பூத கணங்கள், தேவலோக கன்னியர்கள் காணப்படுகின்றனர். கருவறையானது, ஒரு பக்கத்தில் 65 அடி நீளத்திலும், மற்ற பக்கங்கள் 42.5 அடி நீளத்திலும் அமைந்திருக்கின்றது. கருவறைக்குள்ளே பிரமாண்டமான சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இந்த லிங்கம் 7.5 அடி (2.3 மீ) உயரமும், 17.8 அடி (5.4 மீ) சுற்றளவும் கொண்டது. இது ஒரு சதுர வடிவ ஆவுடையாரின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சதுர வடிவ ஆவுடையார் ஒவ்வொரு பக்கத்திலும் 21.5 அடி (6.6 மீ) நீளம் கொண்டதாகும். சதுர வடிவ ஆவுடையார் உட்பட சிவலிங்கத்தின் மொத்த உயரம் 40 அடி (12 மீ) ஆகும்.

மூலவர் இருக்கும் இடத்தின் நான்கு பக்கங்களிலும் சிவன்- பார்வதி, பிரம்மன்-சரஸ்வதி, ராமன்- சீதை, விஷ்ணு - லட்சுமி ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முழுவதும் கட்டி முடிக்கப்படாத இந்த ஆலயத்தின் குவிமாடத்தை, 4 எண்கோண தூண்கள் தாங்கி நிற்கின்றன. ஒவ்வொன்றும் சுமார் 40 அடி உயரம் கொண்டவை. இந்த ஆலயத்தின் வடகிழக்கு மூலையில், ஆலய கட்டுமானத்திற்கான சில கற்களும், செதுக்கப்பட்ட சிற்பங்களும் எச்சங்களாக காணப்படுகின்றன.

இந்தக் கோவிலுக்குரிய சிறிய அருங்காட்சியகம், ஆலயத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இங்கு போஜேஷ்வர் கோவிலின் வரலாற்றை, சுவரொட்டிகள் மற்றும் ஓவியங்கள் மூலம் சித்தரித்திருக்கிறார்கள். இந்த அருங்காட்சியகம் போஜாவின் ஆட்சி மற்றும் அவர் எழுதிய முக்கியமான புத்தகங்கள் பற்றியும் நமக்கு பறைசாற்றுகிறது.

இதனை பார்வையிட கட்டணம் எதுவும் கிடையாது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அருங்காட்சியகத்தை பார்வையிடலாம்.

மேலும் செய்திகள்