மலை உச்சியில் பைரவர்
|உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத் என்ற இடத்தில் மலை உச்சியில் பைரவர் கோவில் அமைந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத் என்ற இடத்தில் அமைந்துள்ளது, 'கேதாரீஸ்வரர் திருக்கோவில்.' இந்த ஆலயத்திற்கு சாலை வழியாக செல்ல முடியாது. கவுரிகுண்ட் என்ற இடத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திற்கு மலை மீது ஏறித்தான் செல்ல வேண்டும். இங்கிருந்தும் சுமார் 500 மீட்டர் உயரத்தில் இருக்கிறது, புகுர்ந்த் பைரவர் கோவில்.
இந்த இடத்தில் சிவபெருமானின் 64 வடிவங்களில் முக்கியமானவராக கருதப்படும், பைரவர் வழிபடப்படுகிறார். மலை உச்சியில் உள்ள ஒரு பாறையில், பைரவர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த பைரவருக்கு மேற்கூரை கிடையாது. திறந்தவெளியில்தான் இவர் வீற்றிருக்கிறார்.
கேதார்நாத் கோவிலுக்கு தெற்கே மலை உச்சியில் அமைந்துள்ள இந்தக் கோவிலை, கேதார்நாத் கோவிலில் இருந்து பார்க்க முடியும். அதே போல் மலை உச்சியில் இருந்து கேதார்நாத் ஆலயமும் அழகாகத் தெரியும். கேதார்நாத் கேதாரீஸ்வரர் கோவிலில் காலையில் நடை திறந்து வழிபாடு செய்யப்படுவதற்கு முன்பாகவே, மலை உச்சியில் உள்ள இந்த பைரவர் கோவிலுக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. ஒருவர் கேதார்நாத் ஆலயத்திற்கு பயணம் சென்றால், அவர் புகுர்ந்த் மலை மீதுள்ள பைரவரை வழிபாடு செய்யாமல், அந்த பயணமும், தரிசனமும் முழுமை பெறாது என்கிறார்கள்.