பைரவகோணா பாறைக் குகை
|ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் நல்லமலை என்ற இடத்தில் உள்ள பைரவகோணா குடவரைக் கோவிலில் சிவபெருமான் லிங்க வடிவில் வீற்றிருக்கிறார்.
இந்தியாவில் பல குகைக் கோவில்கள் அமைந்திருப்பதை நாம் பார்த்திருக்கலாம். குகைக் கோவில்களுக்கு முன்னோடியாக விளங்குபவை, அஜந்தா எல்லோரா குகைச் சிற்பங்கள். இந்தியாவின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற சிறப்புமிக்க குகைக் கோவில்கள், குடவரைக் கோவில்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. அவற்றில் ஒரு குடவரைக் கோவில்தான், ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் நல்லமலை என்ற இடத்தில் உள்ள பைரவகோணா. இங்கு பார்குலேஸ்வர் என்ற பெயரில் சிவபெருமான் லிங்க வடிவில் வீற்றிருக்கிறார். தவிர இந்த குகைக் கோவிலில் த்ரிமுகா துர்கம்பா மகாதேவி என்ற அம்மன் பெயரில் சன்னிதி இருக்கிறது.
கால பைரவரின் காவல் பூமியாக இந்த இடம் போற்றப் படுகிறது. இந்த குகைக் கோவிலில் அமைந்த சரஸ்வதி தேவியின் சிலை மிகவும் வியப்புக்குரியதாக பார்க்கப்படுகிறது. இந்த சரஸ்வதி தேவியின் சிலை, கண்ணாடியில் முகம் பார்ப்பது போன்ற அமைப்பில் மூன்று முகங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பைரவக்கோணா குகைக் கோவில் ஒரே பாறையில் செதுக்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ததில், இந்தக் கோவில் கி.பி. 7 மற்றும் 8-ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள். இங்கு காலபைரவர் வடிவில் சிவபெருமான் நீண்ட காலம் வாழ்ந்ததால் இந்த இடம் 'பைரவகோணம்' என்று அழைக்கப்படுகிறது. பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஸ்வரர் ஆகிய மும்மூர்த்திகளும், ஒரே இடத்தில் வழிபடும் ஒரே கோவில் இதுவாகும்.
இந்தக் குகைக்கோவிலின் மற்றொரு சுவாரசியமான அம்சம் என்னவென்றால், கார்த்திகை பவுர்ணமி மற்றும் மகா சிவராத்திரி அன்று துர்க்கா தேவியின் திருவுருவச் சிலையின் மீது நிலவின் ஒளி படும் வகையில் இந்த குகைக்கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இது பார்ப்பதற்கு கண்கொள்ளக் காட்சியாக இருக்கும். இந்த சிறிய அளவிலான குகைக் கோவிலுக்குள், சிவபெருமானின் 8 சன்னிதிகள் அமையப்பெற்றுள்ளன. ஷஷினகா, ருத்ரா, விஸ்வேஸ்வரா, நாகரிகேஸ்வரா, பார்கேஸ்வரா, ராமேஸ்வரா, மல்லிகார்ஜுனா, பக் ஷமாலிகா ஆகிய பெயர்களில் அழைக்கப்படும் இந்த 8 சிவலிங்கங்களையும் தரிசித்தால், கயிலாயத்தைத் தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள். இந்தக் குகைக் கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் 200 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ளன. லிங்கலா பெண்டா நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படும் அந்த அருவியில் இருந்து வரும் தண்ணீர், 5 கிலோ மீட்டருக்கும் மேல் பாய்ந்து, லட்சுமி தேவி, பார்வதி தேவி மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று ஏரியை சென்றடைகிறது. இது மேலும் பயணித்து திரிவேணி சங்கமம் மற்றும் சித்திரகோட்டா ஏரிகளை அடைகிறது.
நெல்லூர் மாவட்டம் உதயகிரியில் இருந்து 43 கிலோமீட்டர் தொலைவில், பைரவகோணம் இடம் உள்ளது. பைரவகோணம். உதயகிரியில் இருந்து 15 கிலோ மீட்டரில் உள்ள சீதாராமபுரத்திற்கு பல பேருந்துகள் செல்கின்றன. அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் அல்லது சொந்த வாகனங்கள் மூலம் பைரவகோண மலைக்குச் செல்லலாம்.