< Back
ஆன்மிகம்
பரிகாரங்கள் : கல் உப்பும்.. பச்சை கற்பூரமும்..
ஆன்மிகம்

பரிகாரங்கள் : கல் உப்பும்.. பச்சை கற்பூரமும்..

தினத்தந்தி
|
25 Aug 2022 2:37 PM IST

வீட்டில் எதிர்மறை ஆற்றல், கண் திருஷ்டி, கெட்ட சக்திகள் இருந்தால் அவற்றை விரட்டியடிக்க ஆன்மிக ரீதியாக சில எளிய பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.

நாம் தங்குவதற்கு ஒரு இடம் இருக்கிறது என்பதே, மனதிற்கு ஒரு நிம்மதிதான். உள்ளே நுழையும் போது நமக்கான நிம்மதியையும், பாதுகாப்பையும் தரக்கூடியது நாம் வசிக்கும் இல்லம். அப்படிப்பட்ட வீட்டில் எதிர்மறை ஆற்றல், கண் திருஷ்டி, கெட்ட சக்திகள் இருந்தால் அவற்றை விரட்டியடிக்க ஆன்மிக ரீதியாக சில எளிய பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றை இங்கே பார்க்கலாம்.

குடும்பத்தில் தொடர்ந்து கஷ்டம் நிலவுகிறது என்றால், நாம் முதலில் செய்ய வேண்டியது குலதெய்வ வழிபாடு. அந்த வகையில் நாம் இங்கே பார்க்கப் போகும் பரிகாரத்தைச் செய்வதற்கு முன்பாகவும் குலதெய்வ கோவிலுக்குச் சென்று வரலாம். இல்லையென்றால், வீட்டில் உள்ள குலதெய்வ படத்தின் முன்பு தீபம் ஏற்றி வைத்து வணங்கி விட்டு பரிகாரத்தை செய்யலாம்.

ஒரு எச்சில் படாத (புதிய) தட்டில் கல் உப்பை பரப்பி, அதன் மேல் ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து, மனதில் இறைவனை நினைத்தபடி அந்த கற்பூரத்தை ஏற்றுங்கள். அந்த கற்பூரம் எரியும் கல்உப்பு பரப்பிய தட்டை கையில் பிடித்து, வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள், கண்திருஷ்டி அனைத்தும் விலக வேண்டும் என்று மனதை ஒருமுகப்படுத்தி குலதெய்வ படத்திற்கு தீபாராதனை காட்டி விட்டு, வீடு முழுவதும் அந்த தீபத்தைக் காட்டுங்கள். பச்சைக் கற்பூரம் முழுமையாக எரியும் வரை இந்த பிரார்த்தனையை செய்தால் போதும்.

பச்சைக் கற்பூரம் எரிந்து முடித்த பிறகு, தட்டில் இருக்கும் உப்பை தண்ணீர் இருக்கும் ஜக்கில் அல்லது பக்கெட்டில் கொட்டி விடவும்.

சிறிது நேரத்தில் அந்த உப்பு கரைந்து விடும். பின்பு அந்த தண்ணீரை தொடாமல் அப்படியே வீட்டிற்கு வெளியே ஊற்றி விடுங்கள். வாரத்திற்கு ஒரு நாள் என, தொடர்ந்து 3 வாரங்கள் இந்த பரிகாரத்தை செய்து வரவேண்டும். செவ்வாய், வெள்ளி தவிர மற்ற கிழமைகளில் இந்த பரிகாரத்தை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

முதல் வாரம் எந்தக் கிழமையில் பரிகாரத்தை தொடங்குகிறீர்களோ, மூன்று வாரங்களும் அதே கிழமையில்தான் பரிகாரத்தைச் செய்ய வேண்டும்.

இப்படி செய்யும்போது வீட்டில் இருக்கக் கூடிய கண்ணுக்கு தெரியாத கெடுதல் நீங்கிவிடும். இழந்த மகிழ்ச்சியும், நிம்மதியும் திரும்பக் கிடைக்கும்.

மேலும் செய்திகள்