மந்திர ஜெபத்தின் பலன்கள்
|பூஜை அறையிலோ அல்லது தனிமையான இடத்திலோ அமர்ந்து, மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்தபடி செய்யும் ஜெப வழிபாடு மிகவும் சிறப்புக்குரியது. அதுபற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
* துளசி மாலை அல்லது ருத்ராட்ச மாலையை பயன்படுத்தி, மந்திர ஜெபம் செய்வதே சிறந்தது.
* 108 எண்ணிக்கையில் மணிகள் அமைந்த மாலையையே ஜெபிக்க பயன்படுத்த வேண்டும். நம் உடலில் உள்ள 72 ஆயிரம் நாடிகளும், 108 புள்ளிகளில் இணைவதால், அதனை தூண்ட 108 எண்ணிக்கை மணி பயன்படுத்தப்படுகிறது.
* ஜெபிப்பதற்காக மாலையை வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரல் கொண்டு மட்டுமே பிடிக்க வேண்டும். ஆள்காட்டி விரலால் பிடித்து ஜெபித்தால் உரிய பலன் கிடைக்காது.
* தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளித் துணியில் அமர்ந்து ஜெபம் செய்ய வேண்டும். ஜெபம் செய்யும் பொழுது உடலில் மின்னூட்டம் ஏற்படும். அவை நமது உடலிலேயே தங்க வேண்டும். அதற்காகத்தான், மின்கடத்தாப் பொருட்களான தர்ப்பை யும், கம்பளி துணியும் பயன்படுத்தப்படுகிறது.
* ஜெபிக்கும் பொழுது ஜெபமாலை வெளியே தெரியாத படி ஓர் துணியிலோ அல்லது அங்கவஸ்திரம் அணிந்து அதன் உள்பகுதியிலோ வைத்து ஜெபம் செய்யவேண்டும்.
* ஏதாவது ஒரு குருவிடம் தீட்சைப் பெற்ற மந்திரத்தைத்தான் ஜெபிக்க பயன்படுத்த வேண்டும். அந்த மந்திரத்தை ஜெபிக்கும் போது உதடுகள் அசையக்கூடாது. மனதிற்குள்தான் உச்சரிக்க வேண்டும். இதனை 'மானஸ ஜெபம்' என்பார்கள்.
* குருவிடம் பெற்ற தீட்சை மந்திரத்தை சப்தமாக ஜெபிப்பது, வெளி நபர்களுக்கு கூறுவது, எழுதிவைப்பது அனைத்தும், மந்திர யோகத்திற்கு எதிரான செயல்கள். இது போன்று செயல்பட்டால் மந்திரம் சித்தி ஏற்படுவதில் சிக்கல் உண்டாகும்.
* எந்த ஒரு செயலையும் அதற்குரிய இடத்தில் செய்தால் சிறப்பாக நடைபெறும். சமையலறையில் உணவு தயாரிக்காமல் வேறு அறைகளில் சமைத்தால் பல அசவுகரியம் ஏற்படுவது இயல்பு. அதுபோல மந்திர ஜெபத்தை, அமைதியான இடத்தில் அமைதியாக சூழ்நிலையில் செய்ய வேண்டும்.
* சந்தியா கால வேளை எனும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமன காலத்தில் ஜெபம் செய்தால் அதிக பலன் உண்டு. கிரகணம், பவுர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் ஜெபம் செய்வதாலும் பன்மடங்கு பலன் கிடைக்கும். மந்திர ஜெபம் செய்து வரும் பொழுது எளிமையாக ஜீரணமாகும் உணவு, மெல்லிய ஆடைகளை அணிந்து வந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.