குழந்தைகளுக்கு பாலாரிஷ்ட தோஷமா..? திருத்தணி முருகன் இருக்க பயமேன்!
|12 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கிய குறைபாடுகள் விலகவும், அவர்களின் பிறப்பில் கர்மபலன்கள் நீங்குவதற்கும் திருத்தணிக்குச் சென்று வழிபட வேண்டும்.
சூரனை வதைத்த முருகப்பெருமான் கோபம் தணிந்து அமர்ந்த இடமே திருத்தணி எனப்படும் திருத்தணிகை என்கின்றன புராணங்கள். மற்ற படைவீடுகளில் இல்லாத சிறப்பு அம்சங்கள் இந்த படைவீட்டில் உள்ளன. குறிப்பாக, முருகப்பெருமான் இங்கே வேலாயுதத்துக்குப் பதிலாக 'சக்தி ஹஸ்தம்' எனப்படும் வஜ்ர வேலுடன் காட்சியளிக்கிறார். இங்குள்ள சந்நிதியில் முருகனுக்கு எதிரே மயிலுக்குப் பதிலாக யானை உள்ளது.
இங்கு சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை. அதற்கு பதிலாக புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது. முருகனுக்கு இந்திரன் அளித்த சந்தனக் கல்லில் இழைக்கப்பட்ட சந்தனமே தினமும் முருகனுக்குச் சாத்தப்படும். இந்தச் சந்தனத்தில் சிறிதளவு எடுத்து நீரில் கலந்து பருகினால் பல நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. விழாக்காலங்களில் மட்டுமே இந்த சந்தன பிரசாதம் கிடைக்கும்.
பக்தர்களின் துன்பங்களை தணித்து இன்ப வாழ்வை வரமாக அருளும் தலம் திருத்தணிகை. குறிப்பாக குழந்தைகளுக்கு உண்டாகும் பாலாரிஷ்ட தோஷம் நீங்கிட, திருத்தணி முருகனை வணங்கி வழிபட வேண்டும். 12 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கிய குறைபாடுகள் விலகவும், அவர்களின் பிறப்பில் கர்மபலன்கள் நீங்குவதற்கும் திருத்தணிக்குச் சென்று வழிபட வேண்டும். சஷ்டி, கிருத்திகை, செவ்வாய்க் கிழமைகளிலோ அல்லது குழந்தைகளின் ஜன்ம நட்சத்திர தினங்களிலோ திருத்தணிக்கு அழைத்துச்சென்று வழிபடுவதால், விசேஷ பலன்கள் கைகூடும்.
முருகப்பெருமான் தன்னை வணங்குவோர் மனதில் உள்ள பயத்தை போக்குவதுடன், அவர்கள் தங்கள் ஜாதக கிரக தோஷம் கண்டும் அஞ்ச வேண்டியதில்லை. எனவே, முருகன் இருக்க பயமேன்!