ஈரோடு
சென்னிமலை முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்
|சென்னிமலை முருகன் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சூரசம்ஹார விழா நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
சென்னிமலை
சென்னிமலை முருகன் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சூரசம்ஹார விழா நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
சூரசம்ஹாரம்
சென்னிமலை முருகன் கோவிலில் கடந்த 26-ந் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதற்காக சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து அன்று காலை வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமாரசாமியை படிக்கட்டுகள் வழியாக மலை மேல் உள்ள முருகன் கோவிலுக்கு அழைத்து வந்தார்கள். அங்கு கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கி உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று "வினை தீர்க்கும் வேலவன்" என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
இதற்காக இன்று மாலை 4 மணிக்கு மேல் மலை கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகளை படிக்கட்டுகள் வழியாக அடிவாரத்திற்கு அழைத்து வருவார்கள்.
4 ராஜ வீதிகளில்...
அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது 4 ராஜ வீதிகளிலும் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் சென்று சூரர்களை வதம் செய்கிறார். இறுதியில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. அப்போது 5 நாட்களாக விரதம் இருந்து கையில் காப்பு கட்டி இருந்த பக்தர்கள் தங்களது காப்புகளை அகற்றி கொள்வார்கள்.
சூரசம்ஹார விழாவுக்கான ஏற்பாடுகளை ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் எம்.அன்னக்கொடி, சென்னிமலை கோவில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.