கோவையின் காவல் தெய்வம்.. திருமணத்தடை நீக்கும் கோனியம்மன் திருத்தலம்
|வேண்டுதல் நிறைவேறியதும் ஆலயம் வந்து அன்னைக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, மாங்கல்யத்தை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
பல நூற்றாண்டுகளுக்கு முன் காடுகளாகவும், முட்புதர்களாகவும் இருந்த வனப்பகுதி அது. மக்கள் நடமாட்டமே அரிதாக இருந்த பூமி அது.
கோவன் என்ற இருளர் தலைவன் இந்தப் பகுதியை தன் பொறுப்பில் ஆண்டு வந்தான். மக்களுக்கு எப்போதும் நல்லதே செய்ய வேண்டும் என்ற நற்குணம் கொண்ட தலைவன் அவன். இந்த காட்டுப் பகுதியைப் பார்த்தான். இதை சீரமைத்தால் என்ன என்ற எண்ணம் அவன் மனதில் தோன்றியது. சீரமைப்பு பணிகள் தொடங்கின. மரங்கள் வெட்டப்பட்டன. முட்புதர்கள் அகற்றப்பட்டன. காடுகள் இருந்த இடம் அழகான வெட்ட வெளியாய் மாறியது. அங்கே ஒரு புதிய ஊரை உருவாக்கினான். அந்த ஊருக்கு தன் பெயரையே சூட்டினான். கோவன் புதூர் என அந்த ஊர் அழைக்கப்பட்டது. அந்த ஊரே இன்று கோயம்புத்தூர் என அழைக்கப்படுகிறது.
நல்லாட்சி செய்து வந்த கோவன், 'மக்கள் நலம் பெற்று வாழ தனது ஆட்சி மட்டும் போதாது. தெய்வத்தின் அருளும் வேண்டும்' என்று உணர்ந்தான்.
'ஓர் ஆலயத்தை அமைக்கலாமா?' என சிந்தித்தான்; சிறு கோவிலைக் கட்டினான். கோயம்புத்தூருக்கு வடக்கில் துடியலூர் செல்லும் வழியில் சங்கனூர் பள்ளத்தாக்கில் ஓர் அம்மனை பிரதிஷ்டை செய்தான். கோவனுக்கும் அவனது இனத்தாருக்கும் அந்தக் கோவிலில் எழுந்தருளிய அம்மனே குல தெய்வம். அந்த அம்மனுக்கு கோவன் அம்மன் எனப் பெயரிட்டான். பின்னர் அந்தப் பெயர் மருவி கோனியம்மன் ஆனது. ஆனால் இந்தக் கோவில் காலப்போக்கில் முறையான பராமரிப்பு இன்றி போனது.
பல ஆண்டுகளுக்குப் பின் கொங்கு நாட்டை, இளங்கோசர் என்ற மன்னன் ஆளத்தொடங்கினான். தனக்கு பாதுகாப்பாக ஒரு கோட்டையைக் கட்டினான். கோட்டைக்கு உள்ளே ஒரு ஈஸ்வரன் கோவிலையும் கட்டினான். அத்துடன் கோனியம்மனின் சக்தி தன் ஊரில் நிலைப்பது அவசியம் என உணர்ந்தான். எனவே கோட்டைக்கு வெளியே ஒரு கோவில் கட்டி அதில் கோனியம்மனை பிரதிஷ்டை செய்தான்.
பல ஆண்டுகளைக் கடந்த இந்த அன்னையின் ஆலயம் பல மாற்றங்களைக் கண்டது. தற்போது கோவை டவுன் ஹால் மணிக்கூண்டு அருகே கோவில் கொண்டு, ஊரின் காவல் தெய்வமாக, கோவை மக்களின் கண்கண்ட தெய்வமாக அருள் புரிந்து வருகிறாள் அன்னை கோனியம்மன்.
கோனியம்மன்
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது போல் கம்பீரமான கோபுரத்தை தரிசித்த பின்னரே நாம் ஆலயத்தின் உள்ளே பிரவேசிக்கலாம். மூலவராய் எழுந்து அருள்பாலித்து கொண்டிருக்கும் அன்னை கோனியம்மன், வடக்கு திசை நோக்கி அமர்ந்திருக்கிறாள். மூன்றடி அகலமும் இரண்டரை அடி உயரமும் கொண்டு எட்டு கரங்களுடன் அன்னை அருள்பாலிக்கிறாள்.
தன்னை எதிர்த்து போரிட்ட அரக்கனை தன் காலடியில் வீழ்த்தி, எட்டு கரங்களுடன் புன்னகை தவழும் இன்முகத்துடன் அன்னை அருள்பாலிக்கும் அழகை நாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம். சூலம், உடுக்கை, வாள், சங்கம், கபாலம், தீ, சக்கரம், மணி, ஆகிய ஆயுதங்களை சுமந்தபடி அன்னை காட்சி தருகிறாள்.
ஆலயம் முன்பு ஐந்து முகமும் பன்னிரண்டு கரங்களும் கொண்ட பஞ்சமுக விநாயகர் அருள்பாலிக்கிறார். திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆகியோர் அருள்புரிந்து வருகின்றனர். இங்கு நவக்கிரக நாயகர்கள் தங்கள் துணைவியுடன் வீற்றிருப்பது தனிச்சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இந்த நவக்கிரகங்களை வணங்குவதால், கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
நவராத்திரி விழா
மாதப்பிறப்பு, பவுர்ணமி, கார்த்திகை, தீபாவளி, பொங்கல், ஆடி வெள்ளிக்கிழமைகள், தை வெள்ளிக்கிழமைகள், தனுர்மாத விழா அனைத்து நாட்களிலும் அன்னை கோனியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் கூட்டம் இந்த நாட்களில் ஆலயத்தில் நிரம்பி வழியும்.
நவராத்திரியின்போது ஒன்பது நாட்களும் அன்னையை விதவிதமாக அலங்கரிப்பார்கள். அந்த நேரங்களில் அன்னையின் கனிவான முகத்தையும், கனிவு ததும்பும் பார்வையையும், கண்ணைப் பறிக்கும் அலங்காரத்தையும் காண மக்கள் கூட்டம் ஆலயத்தில் அலைமோதும்.
தேர்த் திருவிழா
மாசி மாதத்தில் அன்னையின் ஆலயத்தில் தேர்த்திருவிழா நடைபெறும். இந்தத் திருவிழா தொடர்ச்சியாக பதினான்கு நாட்கள் மிகச் சிறப்புடன் நடத்தப்படுகிறது. இதில் சுற்று வட்டார மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்றுச் செல்கின்றனர். இந்த நகரில் நடைபெறும் தேர்த் திருவிழாக்களில் மிகப்பெரிய தேர்த் திருவிழா கோனியம்மன் ஆலய திருவிழாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடியேற்றத்துடன் தொடங்கும் ஆலயத் திருவிழாவுக்கு, மறு நாட்களில் அன்னை புலி வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், வெள்ளை யானை வாகனம், குதிரை வாகனம், முதலிய வாகனங்களில் வீதியுலா வருவதுண்டு. தெப்பத் திருவிழாவும் இங்கு நடைபெறுகிறது. இரவு இந்திர விமான பல்லக்கில் உற்சவ அம்மன் புறப்பாடு காண்பார். பல முக்கியமான வீதிகள் வழியே வலம் வரும் அம்மன், வேணுகோபால சுவாமி கோவிலை அடைந்து அங்குள்ள தெப்பக் குளத்தில் இறங்குவார். அது சமயம் ஊரே அதிரும் வண்ணம் வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்படும்.
மாங்கல்ய காணிக்கை
திருமணத்தடை நீங்க கன்னியர், அன்னையிடம் மனம் உருக வேண்டிக் கொள்கின்றனர். தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் ஆலயம் வந்து அன்னைக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, மாங்கல்யத்தை காணிக்கையாக செலுத்துகின்றனர். அம்மை, காலரா போன்ற நோய்கள், பிற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டாலோ ஆலயம் வந்து கோனியம்மனுக்கு மாவிளக்கு இட்டு, பொங்கலிட்டு படைத்தால் அன்னை அந்த நோய்களில் இருந்து நிச்சயம் காப்பாற்றுவாள் என சிலிர்ப்போடு கூறுகின்றனர் பக்தர்கள்.
திருவிழா தொடங்கி முதல் வெள்ளிக்கிழமை இங்கு நடைபெறும் குத்துவிளக்கு பூஜை வெகு பிரசித்தம். நூற்றுக்கணக்கான பெண்கள் வரிசையில் அமர்ந்து திருவிளக்கு பூஜை செய்யும் நேர்த்தியைக் காணும்போது நம் மனம் பக்தியில் பரவசப்படுவதை தவிர்க்க இயலாது.
துர்கை அம்மன்
இங்குள்ள துர்கை அம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு கால நேரத்தில் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி வழிபட்டால் தடைபட்ட திருமணம் நடந்தேறும் என்றும், வியாபாரம் பெருகும் என்றும், குழந்தை பேறு உறுதி என்றும் கூறுகின்றனர் பக்தர்கள்.
கோவை டவுன்ஹால் அருகே உள்ளது இந்த கோனியம்மன் ஆலயம். ஆலயம் செல்ல நகரின் பல பகுதிகளில் இருந்தும் நகரப்பேருந்துகள் உள்ளன.
நகரின் மத்தியில் அமர்ந்து மக்களின் நலனைக் காத்து அருள்புரியும் அன்னை கோனியம்மனை நாமும் ஒரு முறை தரிசித்து வரலாமே!
வித்தியாசமான நிச்சயதார்த்தம்
பல திருமணங்கள் இந்த ஆலயத்தில் உறுதி செய்யப்படுகின்றன. மாப்பிள்ளையும், பெண்ணும் அவர்கள் உறவினர்களும் இந்த ஆலயம் வருகின்றனர். பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருவரை ஒருவர் கோவிலில் வைத்து தான் பார்த்துக் கொள்கின்றனர். இருவருக்கும் பிடித்து விட்டது என்றால், இரு வீட்டாரும் கலந்து பேசி அங்கேயே ஒரு முடிவுக்கு வந்துவிடுகின்றனர். திருமணத் தேதி கூட பெரும்பாலும் அப்போதே நிச்சயம் செய்யப்பட்டு விடுகிறது. இப்படி இங்கு நிச்சயம் செய்யும் திருமணத் தம்பதிகள், எந்தக் குறையும் இல்லாமல் வாழ்வதாக பக்தர்கள் கூறுகின்றனர். இப்படி திருமணம் உறுதி செய்வதில் மண மக்கள் வீட்டார் ஒரு புது முறையை இங்கே கடைபிடிக்கின்றனர். அதாவது, உப்பு மாற்றும் நிகழ்ச்சி மூலமாக தங்கள் மகள் திருமணத்தை உறுதி செய்து கொள்கின்றனர். ஒரு முகூர்த்த நாளில் மஞ்சளுடனும் உப்புக் கூடையுடனும் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் அன்னையின் ஆலயம் வருகின்றனர். அன்னைக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, அன்னையின் முன் உப்புக் கூடைகளை பரஸ்பரம் மாற்றிக்கொள்ள திருமணம் உறுதி செய்யப்படுகிறது.