இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவில் "அரபாத் உரை" இனி தமிழிலும் மொழிபெயர்க்கப்படும்!
|உலகெங்கிலும் இருந்து வரும் இஸ்லாமியர்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் மெக்காவில் அரபாத் பிரசங்கம் 14 மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரியாத்,
உலகெங்கிலும் இருந்து வரும் இஸ்லாமியர்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் மெக்காவில் அரபாத் பிரசங்கம் 14 மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் இனி தமிழிலும் அரபாத் உரை வாசிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெக்காவின் தலைவர் அப்துல்ரஹ்மான் அல்-சுதைஸ் கூறும்போது, "அரபாத் உரை மொழிபெயர்ப்பு முயற்சியானது, இப்போது ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில், இத்திட்டம் 14 மொழிகளை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஆங்கிலம், பிரெஞ்சு, மலாய், உருது, பெர்சியன், சீன மொழி, துருக்கிய மொழி, ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பானது. இந்த நிலையில் இனி தமிழ் மற்றும் வங்காள மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்.
அரபாத் உரை மொழிபெயர்ப்பு என்பது உலகத்திற்கான ஒரு பரந்த திட்டமாகும். இதன்மூலம், புனிதத் தலங்களுக்கு வருபவர்கள், அரபு அல்லாத பிறமொழி பேசுபவர்கள் தங்கள் தாய்மொழியில் கேட்க இத்திட்டம் உதவுகிறது, சுமார் 20 கோடி பேருக்கு பயனளிக்கும்.
யாத்ரீகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு சேவை செய்ய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இஸ்லாத்தின் நிதானம் மற்றும் சகிப்புத்தன்மை பற்றிய செய்தியை உலகிற்கு தெரிவிக்க தலைமை ஆர்வமாக உள்ளது. அதன் பொருட்டே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.