ஈரோடு
அறச்சலூர் பொன் அறச்சாலை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
|அறச்சலூர் பொன் அறச்சாலை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
அறச்சலூர்
அறச்சலூர் பொன் அறச்சாலை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
பொன் அறச்சாலை அம்மன்
அறச்சலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பொன் அறச்சாலை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடந்து வந்தது.
இந்த நிலையில் கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்து கடந்த 1-ந்தேதி காலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து அன்று சுதர்சன ஹோமம், மகா லட்சுமி ஹோமம், தனபூஜை, நவக்கிரக ஹோமம் ஆகிய ஹோமங்கள் நடத்தப்பட்டன. பின்னர் மாலை 6 மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழிபாடு, பஞ்சகவ்யம், வாஸ்து சாந்தி, முளைப்பாலிகை, கும்ப அலங்காரம், தெய்வங்களை கும்பங்களில் எழுந்தருளச் செய்தல், யாகசாலை பிரவேசம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, முதல் கால யாக பூஜை தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் யாகசாலை பூஜைக்கு தேவையான பால், தயிர், நெய், ஹோம திரவியங்கள் போன்ற பொருட்கள் வழங்கினார்கள்.
யாக பூஜை
நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு 2-ம் கால யாக பூஜை நடந்தது. பின்னர் விநாயகர் வழிபாடு, புண்யாக வாசனம், பூத சோதனம், கோபுர கலசம் வைத்தல், மண்டல பூஜை, அக்னிகார்யம், வேதபாராயணம், திரவிய ஹோமம், உபசார வழிபாடு நடைபெற்றது. பகல் 11 மணிக்கு பொன் அறச்சாலை அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது.
மாலை 6 மணிக்கு 3-ம் கால யாக பூஜை, மூலமந்திர ஹோமம், திவ்யஹோமம் ஆகிய ஹோமங்கள் நடந்தன. நேற்று காலை 6 மணிக்கு 4-ம் கால யாக பூஜை, புண்யாக வாசனம், மஞ்சாசன பூஜை, மண்டல பூஜை, அக்னிகார்யம், யாக பூஜை, நாடிசந்தானம், யாத்ராதானம் நடைபெற்று அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கும்பாபிஷேகம்
முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நேற்று காலை 7.20 மணிக்கு தொடங்கியது. முதலில் கோபுர மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து பொன் அறச்சாலை அம்மனுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும், சிவாச்சாரியார்கள் ரவி, செந்தில்குமார், வாசுதேவன், கணேசன் ஆகியோர் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அதன் பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் நடந்தது.
பின்னர் கோபூஜை, தசதானம், தசதரிசனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் அறச்சலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதையொட்டி காலை 8 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கரைய குல வேட்டுவக்கவுண்டர்கள், குலாலர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.