திருவாரூர்
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் அன்னாபிஷேகம்
|திருவாரூர் தியாகராஜர் கோவிலில் அன்னாபிஷேகம்
ஐப்பசி பவுர்ணமியையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அன்னாபிஷேகம்
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தன்று சிவலிங்கத்துக்கு அன்னத்தால் அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம். அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்பவர்கள் பூர்வஜென்ம பாவம், வறுமை நீங்கி எல்லாவளமும் பெறுவார்கள் என்பது ஐதீகம். அதன்படி நேற்று ஐப்பசி பவுர்ணமியையொட்டி திருவாரூர் பகுதியில் உள்ள சிவன் கோவிலில் சிவலிங்கத்திற்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடந்தது.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள வன்மீகநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சமைக்கப்பட்ட அன்னம் சாமிக்கு சாத்தப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது. இதேபோல அசலேஸ்வரருக்கும் அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி ராஜராஜேஸ்வரன் செய்து இருந்தார்.
திரளான பக்தர்கள்
திருவாரூர் புதுத்தெரு கர்ணேஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்திற்கு அன்னம், காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. திருவாரூர் கந்தசாய்பாபா கோவிலில் உள்ள ஜோதி லிங்கேஸ்வரருக்கு குருசாமி கனகசபாபதி தலைமையில் அன்னாபிஷேகம் நடந்தது. விளமல் பதஞ்டசலி மனோகர் கோவில், கீழவீதி துர்வாசகர் கோவில், நொடிநைனார் சிவன் கோவில் உள்பட அனைத்து சிவன் கோவிலிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.