< Back
ஆன்மிகம்
அனுமன் அவதாித்த ஆஞ்சநேயாத்ரி மலை
ஆன்மிகம்

அனுமன் அவதாித்த ஆஞ்சநேயாத்ரி மலை

தினத்தந்தி
|
8 Aug 2023 4:22 PM IST

புராதனமான நினைவுச் சின்னங்கள் உள்ள ஊர்களில், விஜயநகர பேரரசர்களால் உருவாக்கப்பட்ட ஹம்பி நகரத்திற்கு முக்கிய இடம் உண்டு.

கர்நாடக மாநிலத்தில் உள்ள இந்த ஹம்பிக்கு அருகில் அனுமனஹள்ளி என்ற இடத்தில் அமைந்திருக்கிறது, 'ஆஞ்சநேயாத்ரி மலை'. இதனை 'அஞ்சனா மலை' என்றும் அழைக்கிறார்கள். புராணங்கள் சொல்லும் கூற்றின்படி, இந்த இடம்தான் கிஷ்கிந்தையாக இருந்ததாகவும், அஞ்சனா தேவி வாழ்ந்த மலைதான், 'அஞ்சனாமலை' என்று அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது இந்த இடத்தில்தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்கிறது, இந்த ஆலயத்தின் தல வரலாறு.

ஹம்பியில் உள்ள சுற்றுலாத் தலங்களில், மலை மீது அமைந்த இந்த அனுமன் கோவில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த மலை தனித்துவமான அழகைக் கொண்டு விளங்குகிறது. இதன் சுற்றுப்புறத்தின் இயற்கை அழகும், மலையின் உச்சியில் நின்று, ஊரைப் பார்க்கும் கண்கொள்ளாக் காட்சியும், இங்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆஞ்சநேயர் பிறந்த இடம் என்பதால், இது பக்தர்களின் புனித யாத்திரை தலங்களில் முக்கியமானதாகவும் இருக்கிறது. ஆஞ்நேயர் இங்கு பிறந்ததால், 'ஆஞ்சநேயாத்ரி மலை'என்று அழைக்கப்படும் இந்த மலை இருக்கும் பகுதிதான், ராமாயண காவியத்தில் சொல்லப்பட்டுள்ள 'கிஷ்கிந்தை' என்ற பகுதியாகும். மலையின் உச்சியில் ஆஞ்சநேயருக்கான ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த மலையை சென்றடைவதற்காக, கல்லால் ஆன படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த மலையில் ஏறுவது அனைவருக்கும் எளிதான ஒன்றாக இருக்கிறது. மலைக்கு ஏறும் போது இரு பக்கத்திலும், மலையை சுற்றிலும் வாழைப்பழம் மற்றும் நெற் வயல்களால் சூழப்பட்ட காட்சி நம் மனதை மயக்குவதாக அமைந்திருக்கிறது. மலையின் உச்சியில் உள்ள ஆஞ்சநேயா் ஆலயம் வெள்ளை நிற பூச்சுக்களால் தூய்மையான எண்ணத்தை நம் மனதில் விதைக்கிறது. ஆலயத்தின் மேற்கூரையில் ஒரு சிறிய சிவப்பு நிற குவிமாடம் கொண்ட பிரமிடு அமைப்பு உள்ளது. அதன் உச்சியில் சிவப்பு நிறக்கொடி ஒன்றும் பறக்கவிடப்பட்டுள்ளது. இது மகாபாரதப் போரில் அர்ச்சுனனுக்கு சாரதியாக இருந்து கிருஷ்ணர் செலுத்திய தேரின் மீது இருந்த கொடியை நமக்கு உணர்த்துகிறது. அர்ச்சுனனின் தேரின் மீது கொடியாக இருந்தது அனுமன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்திற்குள் எளிமையான பாறையில் அனுமனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள், ராமர் மற்றும் சீதாதேவி ஆகியோருக்கும் சிறிய சன்னிதி அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தின் அனுமனை தரிசிக்க ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். மலையின் உச்சியில் இருந்து பார்க்கும் போது, கீழேஓடும் துங்கபத்ரா நதியின் காட்சியும், பள்ளத்தாக்கும் நம் மனதை மயக்குகின்றன. இந்த மலையில் ஏராளமானகுரங்குகளும் காணப்படுகின்றன. அவற்றையும் அனுமனின் உருவமாகவே பக்தர்கள் கண்டு வணங்குகின்றனர். ஹம்பியில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, இந்த ஆஞ்சநேயாத்ரி மலை. விமானம் மூலம் வருபவர்கள் பெல்லாரி விமான நிலையம் வந்து, அங்கிருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹம்பியை அடைந்து, பின்னர் இந்த மலைக் கோவிலை வந்தடையலாம். ரெயில் மூலம் வருபவா்கள் ஹோஸ்பேட் என்றரெயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து ஏராளமான பேருந்துகள் ஹம்பிக்கு இயக்கப்படுகின்றன.

சாலை வழியாக பயணிப்பதாக இருந்தால், பெங்களூரு அல்லது மைசூரு சென்று அங்கிருந்து ஹம்பியை அடைந்து, தனியார் கார், வாகனம் மூலமாக ஆஞ்ச நேயாத்ரி ஆலயத்திற்கு செல்லலாம்.

மேலும் செய்திகள்