< Back
ஆன்மிகம்
ஆடிப்பூரத்தில் அவதரித்த ஆண்டாள்
ஆன்மிகம்

ஆடிப்பூரத்தில் அவதரித்த ஆண்டாள்

தினத்தந்தி
|
18 July 2023 1:37 PM IST

திருவில்லிபுத்தூரில் அருளும் ஆண்டாள் நாச்சியார், ஆடிப்பூரம் அன்று பிறந்ததாக புராணங்கள் சொல்கின்றனர். இந்த நாளில் அவர் அவதரித்த திருத்தலமான திருவில்லிபுத்தூர் ஆலயத்தைப் பற்றியும், ஆண்டாள் நாச்சியார் பற்றியும் சில விஷயங்களை தெரிந்துகொள்வோம்.

பெருமைமிகுதிருவில்லிபுத்தூர்

திருமாலின் 108 திவ்யதேசங்களுக்கும் இல்லாத பெருமை திருவில்லிபுத்தூருக்கு உண்டு. பெருமாள் எனப்படும் மகாவிஷ்ணு வீற்றிருக்கும் அனைத்து ஆலயங்களிலும் அதிகாலையில் நடைதிறந்ததும் திருப்பல்லாண்டும், திருப்பாவையும் பாடப்படும். இந்த இரண்டு பொக்கிஷயங்களையும் பாடிய பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய தந்தை, மகள் இருவரும் பிறந்த ஊர், திருவில்லிபுத்தூர். இவர்கள் இருவரும் பன்னிரு ஆழ்வார் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளனர்.எனவே திருவில்லிபுத்தூரை 'கோதை பிறந்தஊர், கோவிந்தன் வாழும் ஊர்' என்பார்கள்.

திருப்பாவை விமானம்

மார்கழியில் கண்ணனை நினைத்து நோன்பிருந்த ஆண்டாள் நாச்சியார்,30 பாடல்கள் கொண்ட 'திருப்பாவை'என்னும்பிரபந்தம்பாடினார்.அதிகாலையில் கண்ணனை தரிசிக்கச் செல்லும் ஆண்டாள்,தன்னுடைய தோழியர்களை எழுப்பும் வகையில் இந்த பாடல்கள் அமைந்திருக்கும். அதன்படி, ஆண்டாள் தன் தோழிகளை எழுப்பும் சிற்பங்கள், திருவில்லிபுத்தூர் ஆலயத்தில் ஆண்டாள் சன்னிதியின் விமானத்தில் வடிக்கப்பட்டுள்ளன. எனவே இதற்கு 'திருப்பாவை விமானம்' என்று பெயர். ஆண்டாளை தரிசிப்பவர்கள், இந்த திருப்பாவை விமானத்தையும் தரிசிப்பது சிறப்பான பலனைத் தரும்.

கருவறையில் கருடன்

பொதுவாக பெருமாள் கோவில்களில் மூலவரின் கருவறைக்கு எதிரில் அவரை இரு கரம் கூப்பி வணங்கிய நிலையில் கருடன் வீற்றிருப்பார். ஆனால் திருவில்லிபுத்தூரில் கருடனின் அம்சமாகவே பெரியாழ்வார் பிறந்ததாக ஐதீகம். எனவே இங்கு பெருமாளுக்கு அருகிலேயே அவரை வணங்கிய நிலையில் கருடன் இருக்கிறார்.அதாவது தன்மகளான ஆண்டாளை கன்னிகா தானமாக பெருமாளுக்கு தந்தபோது, மாப்பிள்ளைக்கு அருகிலேயே நின்று கொண்டாராம். இதன் அடிப்படையில்தான் கருவறையில் மூலவருக்கு அருகில் கருடன் வீற்றிருக்கிறார்.

பூமாலை சூடும் பெருமாள்கள்

கலியுகம் பிறந்து 98-வதாக நிகழ்ந்த நள வருடத்தின் ஆடிப்பூரத்தில் தோன்றியவர், ஆண்டாள். அவர் வளர வளர கண்ணன் மீது அவருக்கு காதலும் வளர்ந்தது.அவர் அன்பாகசூடிக் கொடுத்த பூமாலையை, பெருமாள் கனிவோடு பெற்றுக்கொண்டு அருள்புரிந்தார். திருவரங்கத்தில் அருளும் ரெங்கநாதரை மணம் முடித்துக் கொண்ட ஆண்டாள் அணிந்த மாலை, திருப்பதி வெங்கடாஜலபதி மற்றும் மதுரை கள்ளழகர் ஆகியோருக்கு கொண்டு செல்லப்படுகிறது.இதற்கான காரணம், கண்ணனை மணம்புரிய வேண்டும் என்று நினைத்த ஆண்டாள், அதற்காக வேண்டிக்கொண்டது இந்த இரண்டு பெருமாள்களிடம்தான்.ஆண்டாளின் ஆசை நிறைவேறியதும், அதற்கு நன்றி செலுத்தும் விதமாகத்தான்,ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, கிளி, பட்டு வஸ்திரம் போன்றவை சித்ராபவுர்ணமியின் போது கள்ளழகருக்கும்,புரட்டாசி 5-ம்திருநாள் அன்று திருப்பதி ஏழுமலையானுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.

ஆண்டாள் வளர்ந்த பந்தல்

ஆண்டாள் சன்னிதிக்கு முன்பாக, 'மாதவிப் பந்தல்' என்ற இடம் உள்ளது. பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்ட ஆண்டாள், இந்தப் பந்தலின் கீழ்தான் வளர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பந்தல் கேரள பாணியில் முழுவதும் மரங்களால் உருவாக்கப்பட்டது. திருப்பாவையில் தன்னை கோபிகையாக பாவித்து ஆண்டாள் பாடிய பாடல்களின் பொருள் நிறைந்த சிற்பங்கள் இந்த பந்தலுக்கு அருகில் இருக்கும் சுவரில் செதுக்கப்பட்டுள்ளன.இதுபோல திருப்பாவை காட்சிகளை ஆண்டாள் கோவில் முன் மண்டபத்தில் ஓவியங்களாகவும் காணலாம் .

காய்கறி வரவேற்பு

மார்கழி மாதத்தில் பகல் பத்து திருவிழா நடைபெறும்.திருவில்லிபுத்தூர் ஆலயத்தில் நடைபெறும் இந்த நிகழ்வின் முதல்நாள் அன்று ஆண்டாள் நாச்சியார், பெரியாழ்வாரின் வம்சாவளியினரான வேதபிரான்பட்டர் வீட்டிற்குச் செல்வார். அந்த வீட்டு முன்பு காய்கறிகளை பரப்பி வைத்து ஆண்டாளுக்கு வரவேற்பு அளிப்பார்கள். இதனை 'பச்சைப் பரத்தல்' என்று அழைப்பார்கள்.பின்னர் கொண்டைக்கடலை, சுண்டக் காய்ச்சிய பால், வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்ட 'திரட்டுப்பால்'மற்றும் மணிப்பருப்பு நைவேத்தியம் செய்யப்படும். திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்கள் இந்த திரட்டுப்பால் மற்றும் மணிப்பருப்பை சாப்பிட்டால், ஆரோக்கியமானஉடல்நிலை ஏற்படும் என்ற அடிப்படையில் ஆண்டாளுக்கும் நைவேத்தியமாக படைக்கின்றனர்.

பக்தியில் பெரியவர்

மதுரை பாண்டிய மன்னனின் முன்னிலையில் நடந்த ஒரு போட்டியில் பங்கேற்ற விஷ்ணு சித்தர், ஸ்ரீமன் நாராயணனே, பரம்பொருள் என்ற உண்மையை நிரூபித்தார். அப்போது விஷ்ணு சித்தருக்காக, பெருமாள் கருட வாகனத்தில் காட்சியளித்தார். அந்தக் காட்சியை விஷ்ணு சித்தர் மட்டுமல்லாது, பாண்டிய மன்னனும், அந்நாட்டு மக்களும் கூட தரிசித்தனர். இப்படி அனைவரும் தரிசித்த காரணத்தால், பெருமாளுக்கு கண்திருஷ்டி ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சிய விஷ்ணு சித்தர், 'திருப்பல்லாண்டு...'பாடினார். இந்த உயர்ந்த பக்தியை கண்டு மகிழ்ந்த பெருமாள், 'நீரே பக்தியில் பெரியவர்' என்று வாழ்த்தினார்.இதனாலேயே விஷ்ணு சித்தர் என்ற அவரது பெயர், 'பெரியாழ்வார்' என்று மாறியது. அவர் பாடிய திருப்பல்லாண்டு பாடலே, உலகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் தினமும் காலையில் பாடப்படுகிறது.

ஆத்ம பலன் தரும் திருப்பாவை

ஆண்டாள் தன்னை, கண்ணனின் காதலியரில் ஒருத்தியான நம்பின்னையாகவும், தன்னுடைய தோழிகளை ஆயர்பாடி பெண்களாகவும்,திருவில்லிபுத்தூரை கோகுலமாகவும் கருதினார்.இதன் அடிப்படையில் பாடிய கருத்துக்கள் திருப்பாவை பாடல்களில் வெளிப்படும். இந்தப் பாடல்களைப் பாடுவோருக்கு கைமேல் பலன் கிடைக்கும். திருப்பாவை என்பது உடல் மற்றும் மனதிற்கு சுகம் தரும் சாதாரண விஷயம் அல்ல. எவ்வளவு இன்பத்தை இந்த பூமியில் அனுபவித்தாலும்,என்றாவது ஒருநாள் அனைவரும் இந்த பூமியைவிட்டு போய்த்தான் ஆக வேண்டும்.அப்போது ஆண்டாளின் திருப்பாவை அனைவருக்கும் துணை நிற்கும். அது அனைவருக்கும் ஆத்மபலத்தை அளிக்கும்.

திருவில்லிபுத்தூரில் அருளும் ஆண்டாள் நாச்சியார், ஆடிப்பூரம் அன்று பிறந்ததாக புராணங்கள் சொல்கின்றனர். இந்த நாளில் அவர் அவதரித்த திருத்தலமான திருவில்லிபுத்தூர் ஆலயத்தைப் பற்றியும், ஆண்டாள் நாச்சியார் பற்றியும் சில

விஷயங்களை தெரிந்துகொள்வோம்.

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னிதி அமைந்த அர்த்த மண்டபத்தில், 'வெள்ளிக்குறடு' என்னும் மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் மாலை 6 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னாருடன் ஊஞ்சலில் எழுந்தருள்வார். இந்த நேரத்தில் ஆண்டாளை தரிசித்தால் திருமணத் தடை விலகும், நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.

மேலும் செய்திகள்