< Back
ஆன்மிகம்
ராசிபுரம் அருகே  பாரக்கல்புதூர் அத்தனூர் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா  திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
நாமக்கல்
ஆன்மிகம்

ராசிபுரம் அருகே பாரக்கல்புதூர் அத்தனூர் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
14 Jun 2022 12:18 AM IST

ராசிபுரம் அருகே பாரக்கல்புதூரில் உள்ள அத்தனூர் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே பாரக்கல்புதூரில் உள்ள அத்தனூர் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராஜகோபுரம்

ராசிபுரம் அருகே உள்ள பாரக்கல்புதூர் கிராமத்தில் ராசிபுரம் நாடு விழியன்குல கொங்கு நாட்டு கவுண்டர்கள் குடிபாட்டு மக்களுக்கு மட்டுமே பாத்தியப்பட்ட அத்தனூர் அம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதற்காக அத்தனூர் அம்மனுக்கு புதிய ஆலயம், மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மகா மண்டபம், வசந்த மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. 9 நிலைகளை கொண்ட 108 அடி உயர ராஜகோபுரம் கட்டப்பட்டு உள்ளது.அத்தனூர் அம்மன், விநாயகர், அத்தாயி அம்மன், முனியப்ப சாமி சன்னதிகள் கட்டப்பட்டுள்ளது.

இந்த கோவிலின் மகா கும்பாபிஷேக விழா நேற்று அதிகாலை 5 மணிக்கு நடந்தது. கடந்த 6-ந் தேதி கிராம சாந்தியுடன் விழா தொடங்கியது பெண்கள் தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்தனர். சீர் வரிசைகள் அழைப்பு மற்றும் மரியாதை செய்தல் நிகழ்ச்சி நடந்தது. தினந்தோறும் பல்வேறு ஹோம பூஜைகள், யாக சாலை பூஜைகள், தீபாராதனை நடந்தன. ராஜகோபுரம் கலச பூஜை, விமானம் கண் திறப்பு, கோபுர கலசம் வைத்தல் அம்மன் மூலவர் பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.

அன்னதானம்

விழாவில் நேற்று அதிகாலையில் திருமறை பாராயணம், விநாயகர் பூஜை, யாக பூஜை, உடன் யாத்ரா தானம், கடங்கள் புறப்பாடு நடந்தது. அதிகாலை 5 மணிக்கு விமானம், ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடந்தன. அதன்பிறகு விநாயகர், அத்தாயி அம்மன், முனியப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பொதுமக்களுக்கு, பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், சின்ன சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் விடிய விடிய கார்களில் கோவிலில் குவிந்தனர். அவர்கள் அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

ஆன்மிக சொற்பொழிவு

அப்போது அவர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி வானவேடிக்கை, கிராமிய நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. கோவில் கோபுரங்கள், கோவில் வளாகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ராசிபுரம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர். விழா ஏற்பாடுகளை தலைவர் வெங்கடாசலம், செயலாளர் மாணிக்கம் என்கிற லட்சுமணன், பொருளாளர் ஏ.டி.சி.பெரியசாமி, ராசிபுரம் நாடு விழியன்குல கொங்கு நாட்டு கவுண்டர்கள் நல அறக்கட்டளை நிர்வாகத்தினர், திருப்பணிக்குழுவினர் மற்றும் பங்காளிகள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்