< Back
ஆன்மிகம்
நதியின் நடுவே அமர்ந்த அம்மன்
ஆன்மிகம்

நதியின் நடுவே அமர்ந்த அம்மன்

தினத்தந்தி
|
18 July 2023 1:56 PM IST

கர்நாடகா மாநிலத்தில் உள்ளது கட்டீல் என்ற ஊர்.இங்குள்ள துர்க்கா பரமேஸ்வரிஅம்மன் கோவில் மிகவும் புகழ் பெற்ற ஒரு ஆலயமாகும். இந்த அம்மனை அப்பகுதி மக்கள்,‘துர்க்கம்மா’ என்றும் அழைக்கிறார்கள்.

பக்தர்கள் நினைத்த காரியம் நடைபெற இந்த ஆலயத்தில் 'யட்சகானம்'என்ற வழிபாட்டை நடத்துகிறார்கள்.

பழங்காலத்தில் இந்தப் பகுதியில் கடுமையான பஞ்சம் நிலவியது. அந்த பஞ்சத்தை போக்குவதற்காக ஜாபாலி என்ற முனிவர்,தவத்தில் ஈடுபட்டார்.அந்த முனிவரின் தவம் சிறப்பானது என்பதால்,இப்பகுதியில் நிலவிய பஞ்சத்தைப் போக்க, தேவலோக தலைவனான இந்திரன் முடிவு செய்தான். அதற்காக தேவலோகத்தில் இருந்து காமதேனு பசுவின் மகளான நந்தினியை பூமிக்கு சென்று, வளம் சேர்க்கும்படி இந்திரன் அனுப்பி வைத்தான்.ஆனால் கர்மவினைகளால் பல பாவங்களைச் செய்த மனிதர்கள் இருக்கும் இடத்திற்குச் செல்ல நந்தினி பசு தயங்கியது.

அந்த பசு,பார்வதியை சரணடைந்து தான் பூலோகம் செல்ல விரும்பவில்லை என்றுகூறியது. அப்போது பார்வதி தேவி, "நீ பசுவாகஅங்கே செல்ல வேண்டாம். அனைத்து பாவங்களையும் நீக்கும் வல்லமைபடைத்த நதியாக மாறி பூலோகம் செல். அத்துடன் உன்னுடைய நீர்த் தன்மையால் அந்தப் பகுதியை பசுமையாக்கு" என்று உத்தரவிட்டார்.அதன்படி 'நேத்திராவதி' என்ற பெயரில் இங்கு நந்தினி பசு, நதியாக ஓடத் தொடங்கியது.

அந்த சமயத்தில் அருணாசுரன் என்றஅரக்கன், பூலோகத்தில் பல தீமைகளைச் செய்து கொண்டிருந்தான். அவனிடம் இருந்துஉயிர்களைக் காக்கும் படி பார்வதியிடம் முனிவர்கள் வேண்டுகோள் வைத்தனர். அதன்படி அரக்கனை வதம் செய்வதற்காக, பார்வதிதேவி மோகினியாக வடிவம் எடுத்து வந்தார். மோகினியின் அழகில் மயங்கிய அரக்கன்,அவளைப் பின் தொடர்ந்தான்.நேத்திராவதி ஆற்றின் நடுவில் இருந்த பாறையின் பின்னால், ஒளிவது போல் மோகினி பாவனைசெய்தாள். அரக்கன் அவளைப் பிடிக்க முயன்றான். அப்போது மோகினியாக இருந்த பார்வதிதேவி, வண்டாக வடிவெடுத்து,அவன் உடலுக்குள் நுழைந்து அவனைக் கொன்றார்.

உக்கிரத்துடன் இருந்த பார்வதியை அமைதிப்படுத்த முனிவர்கள் இளநீரால் அபிஷேகம் செய்தனர்.உக்கிரம் தணிந்த அன்னை,ஆற்றின் நடுவில் 'துர்க்கா பரமேஸ்வரி' என்ற பெயரில் கோவில் கொண்டாள்.இவ்வாலயத்தில் உள்ள அம்மன் சிவலிங்க வடிவமாக இருக்கிறார்.அவருக்கு அம்மன் வடிவில் அலங்காரம் செய்கிறார்கள். நதியின் மடியில் தோன்றிய இடம் என்பதால்'கடில்' எனப்பட்டது. அதுவே தற்போது'கட்டீல்' என்று அழைக்கப்படுகிறது.கோவிலின் பின்பகுதியில் நேத்திராவதி ஆறு இரண்டாக பிரிந்து கோவிலைச் சுற்றி ஓடுகிறது. நதியின் நடுவில் இருக்கும் காரணத்தால், இந்த ஆலயத்தின் கருவறை எப்போதும் ஈரப்பதமாகவே இருக்கும். இந்த ஆலயத்தில் தீர்த்தம்,வளையல், மல்லிகை,மைசூரு மல்லிகை, பாக்குப்பூ, சந்தனம் போன்றவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

மனிதர்களுக்கு ஏற்படும் வெப்ப நோய், குடும்பத் தகராறு, சொத்துப் பிரச்சினை நீங்க, இத்தல தேவிக்கு இளநீர் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.அம்மனுக்கு அணிவிக்கப்படும் மாலையில், உடுப்பிசங்கரபுரம் மல்லிகை முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது.திருமண வரம், குழந்தைப்பேறு, இழந்த பொருள் மீண்டும் கிடைக்க, மல்லிகைப் பூவை வாழை நாரில் தொடுத்து அணிவிக்கின்றனர்.இவ்வாலயத்தில் மகாகணபதி, ரக்தேஸ்வரி, ஐயப்பன்,

நாகதேவதை, பிரம்மன் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன.இவ்வாலயம் காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும். மங்களூருவில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் கட்டீல் பகுதிஉள்ளது.

மேலும் செய்திகள்