மனக்கவலை போக்கும் ஆலப்பாக்கம் புஜண்டேஸ்வரர்
|கடலூர் அருகே ஆலப்பாக்கம் என்ற இடத்தில் உள்ள புனிதவல்லி உடனாய புஜண்டேஸ்வர சுவாமி கோவில். இறைவன் தன் விருப்பப்படியே அமர்ந்த ஆலயமாக இந்தக் கோவில் திகழ்கிறது.
சித்தர்களில் முக்கியமானவர், காகபுஜண்டர். இவர் வீற்றிருக்கும் ஆலயங்கள் அரிதிலும் அரிதுதான். நந்தியம்பெருமானின் சீடர்களில் ஒருவரான காகபுஜண்டர் அருள்பாலிக்கும் அரிதான, அற்புதமான ஆலயங்களில் ஒன்றுதான், கடலூர் அருகே ஆலப்பாக்கம் என்ற இடத்தில் உள்ள புனிதவல்லி உடனாய புஜண்டேஸ்வர சுவாமி கோவில். இறைவன் தன் விருப்பப்படியே அமர்ந்த ஆலயமாக இந்தக் கோவில் திகழ்கிறது. இந்தக் கோவிலில்தான் நந்தியம் பெருமான், தனது சீடர்கள் மார்க்கண்டேயருக்கும், காகபுஜண்ட மகரிஷிக்கும் ஈசனின் பெருமைகளை உபதேசித்து அருளியதாக சொல்லப்படுகிறது. சுமார் 155 ஆண்டுகளுக்கு முன்பு உருவான 'ஸ்ரீசிவாம்ச நாடி நூல்' மூலமாக மேற்கண்ட தகவல்கள் கிடைத்துள்ளன.
இவ்வாலய கருவறையில் சிவலிங்க வடிவத்தில் இறைவன் அருள்பாலிக்கிறார். இவர் 'புஜண்டேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். அம்பாளின் திருநாமம் 'புனிதவல்லி' என்பதாகும். இந்த ஆலயத்தில் உள்ள நந்தியின் சிலை ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று சொல்கிறார்கள். இவ்வாலயத்தில் உள்ள மூலவர் லிங்கமானது, காகபுஜண்ட சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது. இதற்கு சான்றாக, கோவிலின் தென்புறத்தில் வடக்கு திசை பார்த்தவாறு, காகபுஜண்டரும், அவரது மனைவி பகுளாதேவியும் வீற்றிருக்கிறார்கள். காகபுஜண்டர் பல இடங்களில் சிவலிங்கம் நிறுவி வழிபாடு செய்திருந்தாலும், காகபுஜண்டரின் பெயரில் உள்ள சிவலிங்கம், இதுமட்டும்தான் என்றும் சொல்லப்படுகிறது.
சிவபெருமானின் பெருமைகளைப் பற்றி, காகபுஜண்டருக்கு நந்தியம்பெருமான் உபதேசித்த பழமையான இந்த ஆலயம் 'நந்திகுண்டம்' என்றும் அழைக்கப்பட்டுள்ளது. மேலும் காகபுஜண்டர் தவம் இயற்றிய இடம் என்பதால் இந்த ஊர் 'தவநாடு' என்றும் வழங்கப்பட்டிருக்கிறது. கோவில் நுழைவு வாசல் அலங்கார வளைவில் ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் வீற்றிருக்கின்றனர். அவர்களின் இருபுறமும் விநாயகரும், முருகப்பெருமானும் சுதைச் சிற்பங்களாக இருக்கிறார்கள்.
ஆலயத்திற்குள் கொடி மண்டபம் இருக்கிறது. அதில் சூரியன், சந்திரன், சந்திரசேகரர் ஆகியோருக்கு சன்னிதிகள் அமைந்துள்ளன. அதற்கு அடுத்து நந்தி, பலிபீடம், கொடிமரம் உள்ளது. இடது பக்கம் நடராஜர்- சிவகாமசுந்தரி சன்னிதி இருக்கிறது. மகா மண்டபத்தின் வாசலில் இருபுறமும் துவார பாலகர்கள் கம்பீரமாக நிற்க, மண்டபத்தின் இடது பக்கம் புனிதவல்லி தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். நான்கு திருக்கரங்களைக் கொண்ட இந்த அம்மன், தன்னுடைய நான்கு கரங்களிலும் மோதிரம் அணிந்து தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அர்த்த மண்டபத்தில் எந்த சன்னிதிகளும் இல்லை.
கிழக்கு நோக்கிய கருவறையில், தாமரை வடிவிலான சதுர பீடத்தில் பாண லிங்கமாய் புஜண்டேஸ்வரர் காட்சி தருகிறார். கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் திருவுருவங்கள் காணப்படுகின்றன. வெளிப்பிரகாரத்தில் வலப்பக்கம் பகுளாதேவி, காகபுஜண்டர் இருவரும் தனிச் சன்னிதியில் காட்சிதர, அதன் பக்கத்தில் சமயக்குரவர்கள் நால்வரான திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோருடனும் காகபுஜண்டர் வீற்றிருக்கிறார். இது தவிர விநாயகர், வேணுகோபாலர், வள்ளி-தெய்வானை உடனாய சுப்பிரமணியர், நவக்கிரகம், பைரவர் ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன. இவ்வாலயத்தில் வில்வம் மரம், நாகலிங்க மரம், வன்னி மரம் ஆகிய மூன்று மரங்கள் தல விருட்சமாக அமைந்துள்ளது சிறப்பம்சமாகும்.
பிரார்த்தனைகள்
இவ்வாலயத்தின் நாயகனான புஜண்டேஸ்வரர் முன் 21 விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். அதன்பின் ஆலய அம்மனையும், காகபுஜண்டரையும், பகுளாதேவியையும் வழிபட வேண்டும். இவ்வாறு செய்தால் நம்முடைய பிரார்த்தனைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பிரகாரத்தில் இருக்கும் காகபுஜண்டர் சன்னிதியில் ஆயில்ய நட்சத்திரத்தன்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும் என்று கூறப்படுகிறது. வியாபாரத்தில் பெருத்த நஷ்டம், பலவிதமான மனக்கவலைகள் நீங்க, இவ்வாலயத்தில் இருக்கும் பைரவருக்கு, நெய்யில் மிளகு போட்டு தீபம் ஏற்றினால் வியாபாரத்தில் நல்ல விருத்தியும், எப்பேர்ப்பட்ட மனக் கவலைகளும் விலகுமாம். இவ்வாலயத்தில் இருக்கும் சுப்பிரமணியருக்கு கார்த்திகை நட்சத்திரம் அன்று வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்தால், குழந்தைச் செல்வம் கிடைக்கப்பெறும். காகபுஜண்டர் ஜோதிடத்தில் வல்லவராகத் திகழ்ந்தவர். எனவே இவரை வழிபாடு செய்தால் கிரக தோஷங்கள் அகலும் என்கிறார்கள்.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
இருப்பிடம்.
கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் கடலூரில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆலப்பாக்கம் கிராமம்.