ஏழு ஆண்டுகளுக்குப்பின் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி ஆதிகேசவப்பெருமாளை தரிசித்து பக்தகள் பரவசம்
|ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி கருவறையில் காட்சி தரும் ஆதிகேசவப்பெருமாளை வணங்கி பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
கன்னியாகுமரி:
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் புனரமைப்புப்பணிகளுக்காக கருவறையில் இருந்து அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் பாலாலயத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பின்னர் கருவறையில் பாம்பணை மீது பள்ளி கொண்டு அருள்பாலிக்கும் ஆதிகேசவப்பெருமாளை ஒற்றைக்கல் மண்டபத்த்தில் ஏறி தரிசிக்கும் வாய்ப்பு பக்தர்களுக்கு இல்லாமல் போனது.
இந்நிலையில் கடந்த 6-ந் தேதி கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி தரிசிக்க அனுமதிக்கப்படும் என அறிவித்திருந்தனர். ஆனால் ஒற்றைக்கல் மண்டபத்தில் பொருத்த வேண்டிய பாதுகாப்பு கம்பிகள் இணைக்கும் பணி தாமதமாகி நேற்று முடிந்தது. இதனால் இன்று காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஒற்றைக்கல் மண்டபத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
108-வைணவத் தலங்களில் மிக நீண்ட சயனக் கோலத்தில் ஆதிகேசவப்பெருமாள் திருவட்டாறில் பள்ளிகொண்டுள்ளார். ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறினால் மட்டுமே கருவறையில் காட்சி தரும் ஆதிகேசவப்பெருமாளையும், ஏனைய கடவுளர்களையும் தரிசிக்க முடியும்.
ஏழு ஆண்டுகளுப்பின்னர் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி இன்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள் பரவசத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தனர்.