சித்திரை திருவிழா; வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர் அழகர் மலைக்கு திரும்பினார்
|கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி அழகர்மலைக்கு திரும்பியதையடுத்து, அழகர்கோவிலில் உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
மதுரை
மதுரை கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி மதுரை வந்த கள்ளழகர், கடந்த 23-ந் தேதி வைகை ஆற்றில் இறங்கினார். 24-ந் தேதி வண்டியூரில் அமைந்துள்ள தேனூர் மண்டகப்படியில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், ராமராயர் மண்டகப்படியில் தசாவதார காட்சியும் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்துடன் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணி அளவில் மன்னர் சேதுபதி மண்டபத்தில் இருந்து பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்துடன் எழுந்தருளிய கள்ளழகரை, "கோவிந்தா கோவிந்தா..." எனும் கோஷம் முழங்கிட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். .
அதை தொடர்ந்து அங்குள்ள கருப்பண்ணசுவாமி கோவில் சன்னதியில் இருந்து அழகர் மலையை நோக்கி கள்ளழகர் புறப்பட்டார். அப்போது பக்தர்கள் மலர் தூவியும், கண்ணீர் மல்க மனமுருக வேண்டியும் அவரை வழியனுப்பி வைத்தனர். புதூர், மூன்று மாவடி, சுந்தரராஜன்பட்டி, அப்பன்திருப்பதி, கள்ளந்திரி, வழியாக சென்ற கள்ளழகர், இன்று காலை 10.30 மணிக்கு மேல் அழகர்கோவில் திரும்பினார். இதையடுத்து, அழகர்கோவிலில் உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா இன்று நிறைவு பெறுகிறது.