இஸ்லாம்: அனுமதி பெறுவதன் சிறப்புகள்...
|இஸ்லாத்தில் எந்த செயலையும் வரம்பு மீறி செய்வதற்கு இடமில்லை. எதைச் செய்தாலும் ஒரு வரம்புக்குள் கட்டுப்பட்டுதான் செய்ய வேண்டும். மேலும், இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது மற்றும் அனுமதிக்கப்படாதது ஆகிய இரண்டு விதமான வழிமுறைகள் உண்டு.
அனுமதிக்கப்படாதவற்றை அறவே ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது. அனுமதிக்கப்பட்டதையும் கூட பிறரின் அனுமதியின்றி அனுபவிக்கக்கூடாது.
இஸ்லாத்தில் 'அனுமதி பெறுவது' எனும் செயலுக்கு ஒரு சிறந்த முக்கியத்துவம் உண்டு. எதையும் அனுமதி பெற்றுதான் செய்ய வேண்டுமே தவிர, அனுமதியின்றி நடக்கக்கூடாது. தமது வீடாக இருந்தாலும், பிறரின் வீடாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்றுதான் நுழைய வேண்டுமே தவிர, அனுமதியின்றி நுழையக்கூடாது.
நமது வீடாக இருந்தாலும் நமது மனைவி மட்டும் இருந்தால் பரவாயில்லை. அவளிடம் அனுமதி பெறுவது அழகிய பண்பு. அனுமதி பெறாதது பரவாயில்லை. நமது வீட்டில் நமது தாய், உடன்பிறந்த சகோதரிகள், நமக்கு பிறந்த பெண் குழந்தைகள் வசிப்பார்கள். அனுமதியின்றி வீட்டில் நுழையும் போது அவர்கள் எந்த நிலையில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அனுமதி பெற்றால், அவர்கள் தங்களை சீர்படுத்திக் கொள்வார்கள். இந்த வாய்ப்பு அனுமதியில் கிடைக்கிறது. அனுமதியின்றி நுழைவதால் இந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. பிறர் வீடாக இருந்தால் கண்டிப்பாக அனுமதி பெற்றுதான் செல்லவேண்டுமென திருக்குர்ஆன் உத்தரவு பிறப்பிக்கிறது.
"இறை நம்பிக்கையாளர்களே, உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில் அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதிபெற்று, அவர்களுக்கு ஸலாம் எனும் முகமன் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள். (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும். நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது கூறப்படுகிறது). அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள். அன்றியும், 'திரும்பிப் போய் விடுங்கள்' என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், அவ்வாறே திரும்பி விடுங்கள். இதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும். மேலும், இறைவன் நீங்கள் செய்வதை நன்கறிபவன். (எவரும்) வசிக்காத வீடுகளில் உங்களுடைய பொருட்கள் இருந்து, அவற்றில் நீங்கள் பிரவேசிப்பது குற்றமாகாது". (திருக்குர்ஆன் 24:27,28,29)
பிறர் வீட்டில் நுழைவதற்கு முன்பு ஏன் அனுமதி பெறவேண்டும்? இது ஏன் சட்டமாக்கப்பட்டதெனில் ஒருவரின் பார்வை அடுத்தவரின் வீட்டில் உள்ளவர்களின் மீது சென்றுவிடக்கூடாது என்பதற்காகத்தான்.
அனுமதி பெறுவது என்பது மூன்று முறை 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று கூறுவதாகும். அல்லது வட்டார வழக்கில் அனுமதி கோருவதாகும். அல்லது கதவை தட்டுவது ஆகும்.
ஒரு வீட்டில் தீ விபத்தோ, இயற்கை இடர்பாடுகளோ, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஏதேனும் அசம்பாவிதங்களோ, பெரும் விபத்தோ சம்பவிக்கும்பட்சத்தில் அந்த வீட்டில் உள்ளவர்களை காப்பாற்றும் நோக்கத்தில் அனுமதியின்றி நுழைவது குற்றமில்லை. மற்றபடி அனுமதி பெற்றுதான் நுழையவேண்டும். இது சட்டம். சட்டத்தை மீறினால் குற்றம்.