தோஷங்கள் போக்கும் ஆடிப்பவுர்ணமி...!
|தமிழ் மாதங்களில் இறை வழிபாட்டிற்குரிய மாதங்களாக ஆடி, புரட்டாசி, மார்கழி போன்றவை இருக்கின்றன. இந்த மூன்று மாதங்களிலும் இறைவழிபாட்டைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இன்றி இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த மாதங்களில் சுபகாரியங்கள் நிகழ்த்துவதை தவிர்ப்பார்கள். புரட்டாசி மாதம் பெருமாளுக்குரியதாகவும், மார்கழி மாதம், பெருமாள் மற்றும் சிவபெருமானுக்குரியதாகவும் இருக்கும் நிலையிலும், ஆடி மாதம் முழுவதும் பெண் தெய்வமான அம்பிகையை வழிபாடு செய்யும் மாதமாக போற்றப்படுகிறது.
இந்த ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடி வெள்ளிக்கிழமைகள், ஆடித் தபசு, ஆடிப்பூரம், ஆடிப் பவுர்ணமி என்று அம்பிகையை மாதம் முழுவதும் வழிபட்டபடியே இருப்பார்கள். அப்படி அம்மனை வழிபாடு செய்யும் ஆடி மாத நாட்களில் சிறப்பான ஒரு தினம்தான், ஆடிப் பவுர்ணமி. இந்த முழு நிலவு நாளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுபவர்களுக்கு, வாழ்க்கையில் மிக அற்புதமான மாற்றங்கள் ஏற்படும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. ஆடி மாத பவுர்ணமி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து நீராட வேண்டும். பின்னர் சாப்பிடாமல், தண்ணீர், பால், பழம் கூட அருந்தாமல், வீட்டின் பூஜை அறையில் இருக்கும் அம்மன் படத்திற்கு முன்பாக விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அப்போது அம்மனுக்கு நைவேத்தியமாக சாம்பார் சாதம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை படைப்பது நல்லது. வீட்டில் பூஜையை முடித்த பின்னர், அருகில் உள்ள அம்மன் கோவிலுக்குச் சென்றும் அம்மனை கண் குளிர தரிசித்து வழிபட வேண்டும்.
அதோடு அம்மனுக்கு சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் புதிய ஆடைகளை வழங்கலாம். சிவப்புக் கல் ஆபரணம் அணிவித்து வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும். பலவகையான வாசம் மிக்க பூக்களால் அர்ச்சனை செய்வதோடு, அருகம்புல்லாலும் அம்மனுக்கு அர்ச்சனை செய்வது சிறப்பானது. மேலும் ஆடிப்பவுர்ணமி தினத்தன்று அம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்து, வாழைப்பழம் கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வழிபாடு செய்வது மிக அற்புதமான பலன்களைக் கொடுக்கும். மேற்படி பூஜையை முடித்த பின்பு நைவேத்தியப் பிரசாதத்தையும், தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றையும் கோவிலில் உள்ள பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.
அம்மனை மேற்கூறிய வழியில் வழிபடுபவர்களுக்கு மிகுதியான புண்ணிய பலன்கள் ஏற்படும். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வியாபாரங்களில் நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் அறவே நீங்கி லாபங்கள் பெருகும். நோய் நொடிகள் ஏற்படாமல் காக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். விபத்துக்கள், துர்மரணங்கள் ஏற்படுவதை தடுக்கும்.
மேலும் இந்த ஆடிப் பவுர்ணமி தினத்தில் ஏழை எளியவர்களுக்கு, புது வஸ்திரம் மற்றும் உங்களால் முடிந்ததை தானமாக வழங்குவது, அனைத்து விதமான தோஷங்களையும் போக்குகின்ற ஒரு சிறந்த பரிகாரமாகும்.