< Back
ஆன்மிகம்
தமிழ்நாட்டின் உயரமான சிலைகள்

புத்திர கவுண்டம்பாளையம் முருகன், சிந்தலக்கரை வெக்காளியம்மன்

ஆன்மிகம்

தமிழ்நாட்டின் உயரமான சிலைகள்

தினத்தந்தி
|
30 Jan 2024 2:05 PM IST

தூத்துக்குடியில் இருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள சிந்தலக்கரை திருத்தலத்தில் 42 அடி உயரத்தில் வெக்காளியம்மன் உருவச் சிலை அமைந்திருக்கிறது.

இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகளிலும் கூட தெய்வங்களின் பிரமாண்டமான சிலைகளை காண முடியும். அதேபோல் தமிழ்நாட்டிலும் கூட உயரமான தெய்வச் சிலைகள் பல இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

146 அடி உயர முருகன்

உலகில் மிக உயரமான முருகன் சிலையாக மலேசியாவில் உள்ள பத்துமலை அடிவாரத்தில் உள்ள முருகன் சிலை கருதப்பட்டு வந்தது. இதன் உயரம் 142 அடி ஆகும்.

இந்த நிலையில் பத்துமலை முருகன் சிலையை செய்த, அதே ஸ்தபதியைக் கொண்டு, சேலத்தில் புத்திர கவுண்டம் பாளையம் என்ற இடத்தில் 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு திட்டமிட்டு 2016-ம் ஆண்டு முதல் இதன் திருப்பணி தொடங்கியது. முருகனின் ஆறுபடை வீடுகளில் இருந்து மணல் எடுத்துவரப்பட்டு, இந்த முருகன் சிலை வடிக்கும் பணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் தியாகராஜ ஸ்தபதியின் குழுவினர்தான் இந்த முருகன் சிலையையும் வடித்துள்ளனர். வசீகரிக்கும் முக அழகுடன் அமைந்த இந்த முருகப்பெருமான், வலது கையில் அபய ஹஸ்த முத்திரையைத் தாங்கி, இடது கையில் வேல் பிடித்தபடி, மணி மகுடம் சூடிய நிலையில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்த சிலையின் அருகிலேயே லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் சிலைக்கு மேலே சென்று, முருகனின் கையில் உள்ள வேலுக்கு, பால் ஊற்றி அபிஷேகம் செய்யலாம்.

23 அடி உயர நடராஜா்

வேலூரில் பொற்கோவில் என்று அழைக்கப்படும் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில், 23 அடி உயர நடராஜா் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் அருகே உள்ள திம்மக்குடியில் 25 ஆண்டுகளாக சிற்ப கலைக்கூடம் நடத்தி வரும் வரதராஜ் ஸ்தபதி 10 ஆண்டுகளாக இந்த சிலையை அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

இந்த சிலையானது, 15 டன் எடையுடன், 23 அடி உயரம், 18 அடி அகலம் கொண்டதாக வடிக்கப்பட்டுள்ளது. நான்கு கரங்களுடன் காணப்படும் இந்த நடராஜரைச் சுற்றிலும் உள்ள திருவாச்சி போன்ற அமைப்பில், 102 தாமரை மலர்கள், 52 சிங்கங்கள், 34 பாம்புகளின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த சிலையானது, 15 ஆயிரம் கிலோ ஐம்பொன்னால் செய்யப்பட்டிருக்கிறது. தற்போது இந்த நடராஜர் சிலை, ஸ்ரீபுரம் தங்கக்கோவில் அருகே உள்ள திருமண மண்டப வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நடராஜர் சிலையை நிறுவுவதற்காக தனிச் சன்னிதி கட்டும்பணி தொடங்கப்பட்டிருப்பதாகவும், அந்தப் பணி நிறைவடைந்ததும் அந்தச் சன்னிதியில் இந்த நடராஜர் சிலை நிறுவப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அனுவாவி அனுமன்

கோயம்புத்தூா் மாவட்டம் பெரியதடாகம் என்ற இடத்தில் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியர் அருள்பாலிக்கிறார். இவரைத் தவிர ஆஞ்சநேயர், கன்னிமூல கணபதி, நவக்கிரகங்கள், இடும்பன், பாதவிநாயகர் ஆகிய சன்னிதிகளும் இங்கே உள்ளன. 'ஹனு' என்றால் ஆஞ்சநேயர், 'வாவி' என்றால் ஊற்று. அனுமனுக்காக தோற்றுவிக்கப்பட்ட நீரூற்று என்பதால், இத்தலம் 'ஹனுவாவி' என்று அழைக்கப்பட்டு, தற்போது 'அனுவாவி' என்று அழைக்கப்படுகிறது. அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி வந்தபோது தாகம் ஏற்பட்டதாகவும், அப்போது இத்தல முருகனை அவர் வேண்டிக்கொள்ள, முருகப்பெருமானே ஒரு நீரூற்றை உருவாக்கி அனுமனின் தாகம் தீர்த்ததாகவும் சொல்லப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க அனுவாவி மலை முருகன் கோவிலின் அடிவாரத்தில், 45 அடி உயரத்தில் அனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த அனுமன் தன் இருகரங்களையும் கூப்பிய நிலையில் நின்றபடி அருள்பாலிக்கிறார்.

பிரமாண்டமான வெக்காளியம்மன்

தூத்துக்குடியில் இருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் இருக்கிறது, பிரசித்திப் பெற்ற சிந்தலக்கரை திருத்தலம். எட்டையபுரத்தில் இருந்து சுமாா் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த திருத்தலத்தில் சிந்தலக்கரை வெக்காளியம்மன் கோவில் இருக்கிறது. இது அம்மனின் புனிதத்துவம் பெற்ற சக்தி பீடமாக விளங்கி வருகிறது. இங்கே 42 அடி உயரத்தில் வெக்காளியம்மன் உருவச் சிலை அமைந்திருக்கிறது. 10 திருக்கரங்களுடனும், அதில் ஆயுதங்களை ஏந்தியபடியும் காட்சி தரும் இந்த அம்மனை தரிசிப்பதற்காகவே இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். தூத்துக்குடி- மதுரை சாலையில் செல்பவர்கள், நிச்சயமாக இந்த வெக்காளியம்மனை தரிசிக்காமல் செல்ல மாட்டார்கள். சாலையில் செல்லும்போதே இந்த உயரமான அம்மனை தரிசிக்க முடியும்.

இதே தலத்தில் திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட மகாவிஷ்ணுவின் பிரமாண்டமான தோற்றமும் உள்ளது. ஆதிசேஷனின் மேல் சயனித்தபடியான மகாவிஷ்ணுவின் இந்தத் திருக்கோலம் 72 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

36 அடி உயர அய்யப்பன்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே பாவேந்தர் சாலையில் அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் தற்போது 36 அடி உயரத்தில் அய்யப்பன் சிலை பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலை கருவறையில் அய்யப்பன் எப்படி, குத்துகாலிட்டு அமர்ந்த நிலையில் காட்சி தருவாரோ, அதே போன்ற தோற்றத்தில் இந்த பிரமாண்டான சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.

மேலும் செய்திகள்