ஆனித் திருவிழா: வெள்ளி சப்பரத்தில் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் வீதி உலா
|நாளை மறுநாள் நடைபெறும் தேரோட்டத்தில் விநாயகர், சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வருவார்கள்.
நெல்லை:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி- அம்பாள் வீதி உலா நடக்கிறது.
அவ்வகையில் விழாவின் 6-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது. காலை 8 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து வெள்ளி சப்பரத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்றது. அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், நந்திதேவர், சண்டிகேஸ்வரர் சப்பரத்தில் வீதி உலா நடந்தது. தொடா்ந்து அனுப்புகை மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது.
இரவில் சுவாமி நெல்லையப்பரும்- காந்திமதி அம்பாளும் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
கோவிலில் நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கத்தில் மாளவிகாவின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. நெல்லையை சேர்ந்த நாட்டிய பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளும், திருமுறை பாராயணம், சென்னை ஸ்ரீநிதி குழுவினரின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும் நடந்தது. இதைத் தொடர்ந்து இந்த ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் கூட்டு வழிபாடு நடந்தது.
தவழ்ந்த திருக்கோலத்தில்..
இன்று காலை 8 மணிக்கு சுவாமி- அம்பாள் பல்லக்கில் தவழ்ந்த திருக்கோலத்தில் வீதி உலா நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சுவாமி வெள்ளி குதிரை வாகனத்திலும், வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்பாள் வீதி உலாவும் நடக்கிறது. இதைத்தொடர்ந்து சுவாமி நடராஜர் சிவப்பு சாத்தி திருவீதி உலாவும், இரவு 10 மணிக்கு வெள்ளை சாத்தி வீதி உலாவும் நடக்கிறது.
சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. தேரோட்டத்தில் விநாயகர், சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வருவார்கள். தேரோட்டத்தை காணவும், தேரை வடம் பிடித்து இழுக்கவும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரத வீதிக்கு வருகை புரிவார்கள்.
சுவாமி நெல்லையப்பர் தேரில் குதிரை பொம்மைகளை பொருத்தி, வடம் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அம்பாள் தேர், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் தேர் உள்ளிட்ட தேர்களுக்கு அலங்காரம் செய்யும் பணி நடந்து வருகிறது.
தேரோட்டத்தை முன்னிட்டு சுவாமி சன்னதியில் குண்டும் குழியுமாக கிடந்த சாலையை சீரமைத்து புதிதாக சாலை அமைக்கும் பணி நேற்று நடந்தது. மேலும் அந்தப் பகுதியில் உள்ள சாக்கடை கழிவுநீர் ஓடைகளை சீரமைக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.