நெல்லையில் ஆனித் திருவிழா.. தேரோட்டத்திற்கு தயார் நிலையில் நெல்லையப்பர் தேர்
|ஆனித் திருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி- அம்பாள் வீதி உலா நடக்கிறது
திருவிழாவின் 5-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 8 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், நந்தி தேவர், சண்டிகேஸ்வரர் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. தொடா்ந்து அனுப்புகை மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இரவில் சுவாமி நெல்லையப்பர்-, காந்திமதி அம்பாள் இந்திர வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். தொடா்ந்து சுவாமி அம்பாள், விநாயகா், சுப்பிரமணியர் ஆகியோருக்கு சோடச உபசார தீபாராதனை நடந்தது.
பின்னா் பஞ்ச வாத்தியங்கள் முழங்க சுவாமி-அம்பாள் குடவரை வாயில் தீபாராதனையுடன் கோவிலின் வெளியே வந்தனா். நெல்லை சிவகணங்கள் பஞ்ச வாத்திய இசையில் மங்கள வாத்தியங்கள் முழங்க 4 ரத வீதிகளிலும் வீதிஉலா நடந்தது. அப்போது வேதபாராயணம் மற்றும் சிவனடியாா்களால் பன்னிரு திருமுறை பாராயணமும் பாடப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தாிசனம் செய்தனா்.
கோவில் நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கத்தில் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி குழுவினரின் கிராமிய இசை நிகழ்ச்சிகளும், நெல்லையை சேர்ந்த நாட்டிய பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. பெரிய தேரான நெல்லையப்பர் தேரில் சாரம் கட்டும் பணி, குதிரை உள்ளிட்ட பொம்மைகள் பொருத்தும் பணி, அலங்கார துணிகள் கட்டும் பணிகள் நேற்று முடிவுற்று வடமும் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து தேரோட்டத்துக்கு தயார் நிலையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.